ஜம்முகாஷ்மீரில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, பிரிவினைவாதிகள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருப்பதாக பாஜக பொதுச்செயலர் ராம்மாதவ் தெரிவித்தார்.


இது குறித்து ஸ்ரீ நகரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக் கிழமை கூறியதாவது: முந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில் தற்போது அமைதியான சூழலே நிலவிவருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதச் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன.


பயங்கரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்டவற்றால் காஷ்மீர்மக்கள் அதிக அளவிலான துன்பங்களை சந்தித்துவிட்டனர். இனி அவர்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே மத்திய அரசின் ஒரே குறிக்கோளாகும்.


நமது அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்முகாஷ்மீரில் தொடர்ந்து பிரச்னைகளை உருவாக்க முயன்று வருகிறது. எனினும், அவர்களின் முயற்சிகளை நமது ராணுவவீரர்கள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு படையினருடன் சிலர் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இது, மாநிலத்தின் நலனுக்கு உகந்தது அல்ல. காஷ்மீரில் நிலவிவரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பேச்சு வார்த்தை ஒன்றே சிறந்த வழியாகும்.


அந்த வகையில், காஷ்மீரில் அனைத்துத் தரப்பினருடனும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்கின்றன. அவர்கள் பிரிவினை வாதிகளாக இருந்தாலும், அவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தவிவகாரத்தில், அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைத்தால், ஜம்மு-காஷ்மீரில் வெகு விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றார் ராம் மாதவ்

Leave a Reply