மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட தாஹிர் மெர்ச்சென்ட், ஃபிரோஸ் அப்துல் ரஷீத்கான் ஆகிய இருவருக்கும் மும்பை தடா சிறப்புநீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


மற்ற இரு குற்றவாளிகளான அபுசலேம், கரீமுல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச்மாதம் 12-ம் தேதி, 13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப் பட்டது. இதில், 257 பேர் உயிரிழந்தனர்.


மும்பை நிழல் உலகதாதா தாவூத் இப்ராஹிம், டைகர்மேமன், முஸ்தபா டோஸா உள்ளிட்டோர் சதித்திட்டம், குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது.இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, மும்பை தடா நீதி மன்றத்தில் இரு வழக்குகள் தனித்தனியே விசாரிக்கப்பட்டு வந்தன. அவற்றில், ஒருவழக்கில் கடந்த 2007-ஆம் ஆண்டு விசாரணை முடிவடைந்தது. அதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


இரண்டாவது வழக்கில், அபுசலேம், முஸ்தபா டோஸா, கரீமுல்லா கான், ஃபிரோஸ்கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்ச்சென்ட், அப்துல் கயூம் ஆகிய 7 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.


இவர்களில், அப்துல் கயூமுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப் பட்டார். 
மற்ற 6 பேருக்கு எதிராக மும்பை தடா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், 6 பேரும் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவர்கள் 6 பேரும் சதித் திட்டம் தீட்டியது, கொலைக் குற்றச்சாட்டு, வெடிபொருள் தடைச்சட்டம், ஆயுதத் தடைச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.


இவர்களில், தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மற்றும் டோஸா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்த அபுசலேம், குஜராத் மாநிலத்தில் இருந்து மும்பை நகருக்கு வெடி மருந்துகளைக் கொண்டு வந்ததாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


மேலும், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றை அபுசலேம் கொடுத்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனவே, இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டிய முக்கியமானவர்களில் ஒருவர் அபுசலேம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதனிடையே, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த முஸ்தபா டோஸா, மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் மாரடைப்பால் கடந்த ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார். 


இந்நிலையில், மற்ற 5 பேருக்கும் வியாழக்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தாஹிர் மெர்ச்சென்ட், ஃபிரோஸ் கான் ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், அபு சலேம், கரீமுல்லா கான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது குற்றவாளியான ரியாஸ் சித்திக்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டடுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


குண்டு வெடிப்பு முதல்… தண்டனை வரை…
1993 மார்ச் 12: மும்பைநகரின் 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு. 257 பேர் உயிரிழப்பு, 713 பேர் காயம்
நவம்பர் 4: சஞ்சய்தத் உள்பட 189 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
நவம்பர் 19: வழக்கு சிபிஐ வசம் ஒப்படைப்பு
1995 ஏப்ரல் 19: விசாரணை தொடக்கம்
2000 அக்டோபர்: 684 சாட்சிகளிடம் அரசுதரப்பு விசாரணை நிறைவு
2001 மார்ச்9-ஜூலை 18: குற்றம் சாட்டப் பட்டவர்கள் வாக்குமூலம்
2002 ஆகஸ்ட் 22: குற்றம் சாட்டப்பட்டோர் தரப்புவாதம் நிறைவு
2006 ஜூன் 13: அபுசலேம் மீதான வழக்கு பிரிப்பு
செப்டம்பர் 12: தண்டனை அறிவிப்பு. யாகூப் மேமனின் குடும்பத்தினர் 4 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு; 3 பேர் விடுவிப்பு. 12 பேருக்கு மரண தண்டனை, 20 பேருக்கு ஆயுள் சிறை அறிவிப்பு
2011 நவம்பர் 1: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்
2014 மே, 2013: யாகூப் மேமனின் கருணை மனு பிரணாப் முகர்ஜியால் நிராகரிப்பு
ஜூலை 30: நாகபுரி சிறையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.
2017 ஜூன் 16: அபு சலேம், முஸ்தபா டோஸா, ஃபிரோஸ் கான், தாஹிர் மெர்ச்சென்ட், கரீமுல்லா கான், ரியாஸ் அகமது சித்திக் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள்- தடா நீதிமன்றம் அறிவிப்பு
ஜூன் 28: மும்பை மருத்துவமனையில் முஸ்தபா டோஸா மாரடைப்பால் உயிரிழப்பு
செப்டம்பர் 7: தாஹிர் மெர்ச்சென்ட், ஃபிரோஸ் கானுககு மரண தண்டனை, அபு சலேம், கரீமுல்லா கானுக்கு ஆயுள் சிறை. ரியாஸ் சித்திக்குக்கு 10 ஆண்டுகள்சிறை தண்டனை அறிவிப்பு


பாஜக வரவேற்பு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகளுக்கு மும்பை தடா நீதிமன்றம் அளித்துள்ள தண்டனயை பாஜக வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


சர்வதேச அளவிலான பிரச்னைகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.இந்நிலையில், மும்பை தொடர் குண்டு வெடிப்புவழக்கில், குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதில், இந்தியா உறுதியுடன் இருப்பதைக் காட்டுகிறது. மேலும், இந்தத் தீர்ப்பின் மூலம், மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த 257 பேரின் குடும்பத்துக்கு நீதி கிடைத்துள்ளது என்றார் அவர்.

Leave a Reply