மக்களவைத் தேர்தலில் ஒவ்வொருகட்ட  வாக்குப்பதிவிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விழும்வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. மோடிஅலை வாராணசி, ஜார்க்கண்டில் அண்மையில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் நிரூபணமானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பலர்சேர்ந்து வருகிறார்கள்.

ஆனால் மறு பக்கத்தில், எதிர்க் கட்சிகள் கூட்டணியில் தில்லியிலும் சரி, பிகாரிலும்சரி ஒற்றுமை இல்லை. எதிர்க் கட்சிகளுக்கு வாக்களித்தால், அக்கட்சிகள் என்ன பணிசெய்யும் என மக்களுக்கு தெரியவில்லை.

பிகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 35இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்வதைதவிர்க்கிறார். இதேபோல், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்யவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற இடங்களைக் காட்டிலும் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என நம்புகிறேன். மக்களவைத் தேர்தலில் பயங்கரவாதம், தேசியவாதம் ஆகியவை முக்கிய விவகாரங்களாக விவாதிக்கப்படுகிறது. அதேபோல் வளர்ச்சிவிவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு மக்கள் அதிகளவில் ஆதரவு அளிக்கின்றனர்.

பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவதற்கு மத்தியஅரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பொய்யான பிரசாரம் செய்துவருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று அக்கட்சிகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், முஸ்லிம்கள் என்ன பயங்கரவாதிகளா? என்றார் பாஸ்வான்.

Leave a Reply