மூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. 

இந்தியா அரசியல் வரலாற்றில் 19 மாநிலங்களில் ஆட்சியைபிடித்து, பாரதிய ஜனதா கட்சி முக்கிய மைல்கல்லை எட்டியது. பாஜக நேரடியாக 13 மாநிலங்களிலும், கூட்டணி கட்சிகளுடன் 6 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசம் தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியது. இதில், குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்தாலும், ஹிமாச்சலில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பறித்தது. 

இந்நிலையில், தற்போது திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றுள்ளது. திரிபுரா மாநிலத்திற்கான வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் கடந்த 18-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் சங்மா (வில்லியம்நகர்) வெடிகுண்டுதாக்குதலில் கொல்லப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் முதல்வர்வேட்பாளர் நெய்பியு ரியோ போட்டியின்றி அவரது தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மீதமுள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில் 75 சதவீதமும், மேகாலயாவில் 67 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி யுள்ளது. ஆங்கில ஊடகங்கள் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகமுடிவுகள் இருக்கும் என்று  கூறுகின்றன. ஆக்ஸிஷ் மை இந்தியா மற்றும் நியூஸ்24 இணைந்தும், அதேபோல் நியூஸ்X செய்தி நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

 இதில், திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது சாரி முன்னணியிடம் இருந்து பாஜக பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதேபோல், நாகாலாந்து மற்றும் மேகாலயாவிலும் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவே கணிப்புகள் கூறுகின்றன.

திரிபுரா:-

     ஆக்ஸிஷ் மைஇந்தியா மற்றும் நியூஸ்24
        பாஜக கூட்டணி : 40-50 இடங்கள்
        இடது முன்னணி: 9-10 இடங்கள் 

     நியூஸ்X
       பாஜக கூட்டணி : 35-45
       இடது முன்னணி : 14-23
       காங்கிரஸ்         : 0

நாகாலாந்து:-

     நியூஸ்X
       பாஜக கூட்டணி: 27-32
       காங்கிரஸ்       : 0-8
       நாகாலாந்து முன்னணி: 20-25

மேகாலயா:-

     ஆக்ஸிஷ் மைஇந்தியா மற்றும் நியூஸ்24       
         பாஜக: 30
         காங்கிரஸ்: 20
         தேசிய மக்கள் கட்சி : 2
         மற்றவர்கள் – 4

     நியூஸ்X
       பாஜக: 8-12
       காங்கிரஸ்: 13-17
       தேசிய மக்கள் கட்சி : 23-27
  

மேற்கண்ட கருத்துக் கணிப்புகளின் படி பாரதிய ஜனதா கட்சி 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துவிடும். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில்தான் இது தெரியவரும். கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக.,வை  உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மேற்கொண்ட தேர்தல்பிரச்சாரத்தில் உரியபலன் கிட்டவுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

         

மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் படி பாஜக 3 மாநிலங்களில் ஆட்சியைபிடிக்கும் பட்சத்தில் அது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும். நாட்டின் மிகப் பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் மிகவும் குறைவான மாநிலங்களில் ஆளும்நிலைக்கு தள்ளப்படும். மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் ஆட்சியை திரிணாமூல் வசம் இழந்துவிட்ட நிலையில் தற்போது திரிபுராவையும் விட்டுவிட்டால் அக்கட்சிக்கு கேரளா மட்டுமே கைவசம் இருக்கும்.  

மூன்று மாநிலதேர்தல்களை தொடர்ந்து, அடுத்ததாக கர்நாடக மாநில சட்டப் பேரவை தேர்தல் உடனடியாக வரவுள்ளது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்கள் சிறியவை. ஆனால், கர்நாடக மாநிலம் 225 தொகுதிகளை கொண்டது. கர்நாடகாவில் வெற்றிபெறும் பட்சத்தில் பாஜக அசைக்க முடியாத வலுவான கட்சியாக அது வலம் வரும். 

வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை, பாஜக மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், அசாம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. தற்போது, திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களை கைப்பற்றும் பட்சத்தில் மிஸோரம் மாநிலத்தைதவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான்.

Leave a Reply