இறைவனை தரிசனம் செய்து விட்டு நாங்கள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம். இதுதான் இந்த நாட்டின் இயல்பு. இந்த மண்ணின் இயல்பு. எந்த மதமாக இருந்தாலும், அவர்கள் வணங்கும் இறைவனை மதிக்க வேண்டும். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் இறை \நம்பிக்கை இல்லை. நாங்களெல்லாம் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொண்டு, நல்ல நேரம் பார்த்துதான் எல்லாம் செய்து கொண்டு, ரகசியமாக யாருக்கும் தெரியாமல் கடவுளை கும்பிட்டு, தனக்குவேண்டிய அருள் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.

தனது தொண்டர்கள் எல்லாம் எந்தவிதத்திலும் அந்த அருள் கிடைக்க கூடாது. அவர்களெல்லாம் பகுத்தறிவுவாதிகளாக இருக்க வேண்டும். ஹிந்தி படிக்கவேண்டும் டெல்லி செல்லவேண்டும் என்றால் தன் வீட்டு பிள்ளைகள் படிக்கலாம். ஆனால், ஏழை தொண்டன் எந்த விதத்திலும் முன்னேறி விடக்கூடாது என்பது போன்ற நடவடிக்கைதான் திமுகவின் நடவடிக்கை. திமுகவின் வேட்பாளர் கனிமொழி பிரசாரம் மேற்கொள்ளும் போது பலபொய்யான தகவல்களை சொல்லி உள்ளார். ஐந்து ஆண்டுகள் மோடி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனையை இவர்கள் வந்து கட்டி கொடுப்பார்களாம். இதைகேட்பதற்கு சிரிப்பாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, இது 48 மாதத்தில் மக்களுக்கு பயன்தரும் என கூறியுள்ளார். பத்து வருடங்கள் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எந்த எண்ணமும் வரவில்லை. தற்போது தூத்துக்குடியில் போட்டியிடுவதால் எய்ம்ஸ் மருத்துவமனை நினைவுக்கு வருகிறது.
தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் மோடிக்கும் அதிமுகவுக்கு வாக்களிக்கவேண்டும்.

ஏனென்றால், இலங்கையில் தமிழர்களை கொல்லப்படும் போது காங்கிரஸ் -திமுக பார்த்துக் கொண்டிருந்தவர்கள். ராஜபக்சேவை தனது அறிக்கையில், காங்கிரஸ்- திமுக ஆட்சியின் துணையோடுதான் அங்கே தமிழர்களுக்கு எதிரான போர் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். இதற்கு கனிமொழி என்ன பதில் சொல்லப் போகிறார். அதேபோல ராஜபக்சேவிடம், பரிசு வாங்கி வந்துவிட்டு தமிழர்கள் பாதுகாப்போம் என்று சொன்னால் தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இலங்கை தமிழர்களை கொன்ற ரத்தக்கறையோடு அவர்கள் இங்கு வந்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். உங்களது வார்த்தைகளை அளந்து பேசுங்கள். மோடியை மோசடி என்று சொல்லியிருக்கிறார். மோசடிப் பேர்வழிகளில் மோடியை மோசடி என்று சொல்லக்கூடாது. தரம்தாழ்ந்து ஸ்டாலின் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன சொன்னாலும் தமிழ் மக்கள் இனி உங்களை நம்ப போவதில்லை. நீங்கள் முதல்வராக வரமுடியாது. நீங்கள் சிபாரிசு செய்யும் ராகுல் பிரதமராகும் வர முடியாது.அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளோம் என தெரிவித்துக் கொண்டு, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ராகுலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதனால் ராகுல் தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் வேட்பாளரா?. தூத்துக்குடி மக்களுக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.மத்திய பாஜக அரசு மாநில அதிமுக அரசு மக்களுக்கான அத்தனை நல்லதிட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறோம்.சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஆலையையும் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பது எங்களது கருத்து. மக்கள் விருப்பத்துக்கு மாறாக என்றுமே நாங்கள் நடந்து கொள்ளமாட்டோம்

 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக, கழுகாசலமூர்த்தி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பேசியது.

Tags:

Leave a Reply