தமது இந்திய சுற்றுப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடல் நீரை குடிநீராக்கும் வாகனத்தை பரிசாக வழங்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஓல்கா கடற்கரையில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து நரேந்திரமோடி பார்வையிட்டார். கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்பில் பயணம் செய்தபடியே, அவர்கள் அந்தசுத்திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்டனர்.

இந்த வாகனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நரேந்திர மோடி, அதுகுறித்து நெதன்யாகுவிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். சிறிய ரகஜீப் போன்ற வடிவமைப்புடன் இருக்கும் இந்த வாகனமானது, நாளொன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரை மிகவும் தூய்மையான குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் திறன்படைத்தது. அதேபோல், நாளொன்றுக்கு 80 ஆயிரம் லிட்டர் அளவுகொண்ட மண் மாசுகளுடன் கூடியநீரை இந்த வாகனத்தால் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

தமது இஸ்ரேல் சுற்றுப்பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இந்தசுத்திகரிப்பு வாகனத்தின் தொழில்நுட்பம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டிருந்தார். வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், இந்தவாகனத்தின் அவசியம் குறித்தும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் ஜன.14 முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நரேந்திர மோடிக்கு அந்தவாகனத்தை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தவாகனம், இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply