ஊழலுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால், வேறு வழியின்றி லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ்குமார் கூறினார்.

பீகார் மாநிலத்தில், நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. துணை முதல்- மந்திரியாக இருந்த லாலு மகன் மீது சி.பி.ஐ. ஊழல்வழக்கு பதிவு செய்தது.

இதனால், அவரை பதவி விலகுமாறு நிதிஷ்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் பதவி விலகமறுத்ததால், நிதிஷ்குமார் பதவி விலகினார். லாலு கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். மறுநாளே, பா.ஜனதா ஆதரவுடன், மீண்டும் முதல்மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில், இந்தவிவகாரம் குறித்து நிதிஷ் குமார் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. நான் அதுபற்றி எந்த விளக்கமும் கேட்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உரியபதில் அளிக்குமாறு மட்டுமே கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நிதிஷ்குமார் சி.பி.ஐ. அதிகாரியா? போலீசா?’ என்று என்னை கேலிசெய்தனர்.

லாலு பிரசாத் யாதவ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஊழலை கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள மாட்டேன் என்று பேசிவரும் என்னால் எப்படி அமைதியாக வேடிக்கை பார்க்கமுடியும்? அப்படி இருப்பது, ஊழலுடன் சமரசம் செய்து கொள்வதாக அர்த்தம் ஆகிவிடும். ஆகவே, லாலுவுடனான மகா கூட்டணியில் இருந்து விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.

பிரதமர் மோடியுடன் மோதும்அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை. ஆனால், மோடிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆட்சேப கரமான குற்றச்சாட்டுகளை கூறிவந்தது.

மகாகூட்டணியின் நலனுக்காக நான் அதை சகித்துக் கொண்டேன். இருப்பினும், லாலு பிரசாத்துக்கு எதிராக ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ஒருவர்கூட எதுவும் கூறியது இல்லை.

மதச்சார்பின்மை விஷயத்தில், யாரிடம் இருந்தும் நான் சான்றிதழ்பெற தேவையில்லை. மதச்சார்பின்மையின் பொருள் என்ன? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேர்ப்பதுதான் மதச்சார்பின்மையா?

துணை ஜனாதிபதி தேர்தலைபொறுத்தவரை, காங்கிரஸ் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியைத்தான் ஆதரிப்போம். அவருக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டோம் இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார். 

Leave a Reply