இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தவரை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “குடியரசுத் துணைதலைவர் வெங்கைய நாயுடு அவர்களை எனக்கு 25 ஆண்டுகளாகத் தெரியும். அவர் குறித்து அறிந்து கொண்ட நான் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பினேன். ஹைதராபாத் நகரில் ஒருநண்பர் மூலமாக முதன்முதலில் அவரைச் சந்தித்தேன். அதன் பின்னர் ஒருமுறை பெங்களூரில் 2 மணிநேரம் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவர் தப்பித் தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். காரணம் அவரிடம் பேசியதைவைத்து சொல்கிறேன் அவர் ஒரு ஆன்மிக உணர்வு கொண்ட மனிதர்.

அவர் எப்போதும் எளியமனிதர்கள் குறித்துதான் பேசுவார். அந்த அக்கறை எனக்கு ஆச்சர்யம் தந்தது. வெங்கையாவின் நினைவாற்றல் எனக்கு பிடிக்கும். அவர் இன்னும் பலஉயரங்கள் செல்ல வேண்டும். அதற்கான ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என ஆண்டவனை நான் வேண்டிக்கொள்கிறேன்.

இங்கு மரியாதைக்குரிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கிறார். மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு உங்களுக்கு எனதுமனமார்ந்த வாழ்த்துகள். அதை நீங்கள் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் அது தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே.

மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள். இதில் யார்கிருஷ்ணன் யார் அர்ஜுணன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமேதெரியும். உங்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்று பேசியுள்ளார்.

Comments are closed.