பார்வை குறைபாடு உடைய 13வயது சிறுவன், கோவை ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்.சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரைப்போலவே உடையணிந்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்பொழிவாற்றுவதில் மிகவும் திறமைசாலி.

இவரது திறமையை அறிந்து வியந்த மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் தேசிய விருதினை வழங்கி கவுரவித்தது.வழக்கமாக இந்த விருதினை இந்திய பிரதமர் வழங்குவார், ஆனால் விருது வழங்கும் நாளன்று பிரதமர் மோடி சென்னை வெள்ளத்தை பார்வையிட வந்துவிட்டதால் பிரதமர் சார்பில் அமைச்சகமே விருதினை வழங்கியது.
நடந்த சம்பவத்தை பிரதமருக்கு கடிதமாக எழுதி அனுப்பிய சபரி வெங்கட், உங்கள் கையில் விருது வாங்கவேண்டும், உங்கள் அருகாமையில் இருக்கவேண்டும் என்பது என் கனவு அது நடக்கமுடியாமல் போய்விட்டது என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 5ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து சபரி வெங்கட்டிற்கு ஒரு போன் வந்தது.நாளை கோவை வரும் பிரதமர் உங்களை சந்திக்கவிருக்கிறார் விமான நிலையம் வந்துவிடவும் என்று போனில் பேசியவர் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் பகல் 12.30 மணி உச்சி வெயிலில் வந்திறங்கிய பிரதமரை வரவேற்க விமானம் அருகே அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 11 பேர் கட்சி வேட்பாளர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரே ஒருவர் சபரி வெங்கட் மட்டுமே.

வேட்பாளர்கள் 11 பேருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட பிரதமர் அனைவருககும் வணக்கம் தெரிவித்து ஒரே நிமிடத்தில் அனுப்பிவிட்டார், அடுத்து தனியாக நின்றிருந்த சபரிவெங்கட்டிடம் வந்தார்.

சபரி வெங்கட்டின் துணைக்கு உடன் நின்ற அப்பா சீனிவாஸ் தன் மகன் சபரி வெங்கட் பெயர் சொல்லி பிரதமருக்கு அறிமுகம் செய்துவைக்க, எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் சபரியிடம் பேசஆரம்பித்தார்.சபரி பிரதமரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை பிரதமர் கையில் கொடுத்து வாங்கிக்கொண்டார்.

சபரி இந்தியில் பேச, இன்னும் உற்சாமான பிரதமர் சபரிவெங்கட்டின் உயரத்திற்கு குனிந்து அவனது தோளில் கைபோட்டுக்கொண்டு சகஜமாக பேசஆரம்பித்தார்.

தங்களை பார்க்கவேண்டும் என்ற என் கனவு நிறைவேறியது மிக்க நன்றி ஐயா என்ற சபரியிடம் 'உனது அடுத்த கனவு என்ன?' என்ற போது 'ஐஏஎஸ் ஆக வேண்டும் தங்களைப்போல நிர்வாகத்திறமை பெறவேண்டும்' என்று சொல்லவே நிச்சயம் அது உன்னால் முடியும் நான் உனக்கு உதவுவேன் என்றார்.

எங்கே உன் தனித்திறமையை காட்டு என்றதும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை சுருக்கமாக நிகழ்த்த மனம் நெகிழ்ந்த பிரதமர் சபரியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்து பாராட்டினார்.

Leave a Reply