பிரதமர் மோடி, 2014ல் வெற்றி பெற்றது போல், இப்போதும் வெற்றி பெறுவார்’ என, நமது விமானங்கள், பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குவதற்கு முன்பேசொன்னேன். என் நம்பிக்கைக்கு பல காரணங்கள்.

முதல் காரணம் மோடி. டில்லியில் உட்கார்ந்திருக்கும் ஊடகர்களும் அறிவுஜீவிகளும் வேண்டியமட்டும், மோடியை கழுவி ஊற்றலாம். ஆனால், மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் மோடிதான். ரேடியோ வழியாக மனம்விட்டு பேசுகிறார். சமூக ஊடகம் வழியாக தகவல் பரிமாறுகிறார். ஏராளமான நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார். மேடைகளில் பேசுகிறார். ‛கடுமையாக உழைக்கிறார்; சின்சியராக செயல்படுகிறார்; உறுதியான முடிவுகள் எடுக்கிறார்’ என்பதை, இவற்றின் வழியாக மக்கள் புரிந்துகொள்கின்றனர். கொடுத்த பல வாக்குறுதிகளை, மோடி நிறைவேற்றவில்லை. அது உண்மைதான். ஆனால், அவர் இந்தநாட்டுக்காகவும் மக்கலுக்காகவும் உழைக்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

இரண்டாவது காரணம், மோடியின் அசாத்திய சக்தி. மக்கள் கூட்டத்தோடு உரையாடும்கலை அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. அதுதான், அவரை சுதந்திர இந்தியாவின் மகத்தான தேர்தல் பிரசாரகராக தூக்கிநிறுத்தியிருக்கிறது. கடந்த, 2014 தேர்தலின்போது, மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். எண்ணற்ற கூட்டங்களில் பேசினார். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரதுசக்தி வற்றவில்லை. இப்போதும், 150 கூட்டங்கள் அவர் பேச தேதி குறிக்கப் பட்டுள்ளது. அது இன்னும் அதிகமாகலாம். அதிபர் தேர்தல் மாதிரி இந்திய தேர்தலை இந்த தடவையும் மாற்றி அமைக்கிறார் மோடி.

மூன்றாவது காரணம், கூட்டணி. 2004 ல், செய்த தவறில் இருந்து, பா.ஜ., பாடம் கற்றுக்கொண்டது. அந்த தேர்தலுக்கு முன்பே, முக்கிய தோழமை கட்சிகள் சிலவற்றை ஒதுக்கிவைத்தது பெரும் தவறு. தி.மு.க., விலகிச்சென்று எதிர் அணியில் சேர அனுமதித்ததால் மட்டும், பார்லிமென்டில், 14 இடங்களை பறிகொடுக்க நேர்ந்தது. பாடம்படித்து விட்டதால், இம்முறை பழைய தோழர்களை பிடித்துவைத்துக் கொண்டது. புது நண்பர்களையும் சேர்க்க முடிந்தது.

நான்காவது காரணம், தேர்தலுக்கு தயாராக இல்லாத எதிர்க்கட்சிகள். மோடி எதிர்ப்பு என்கிற ஒன்றைத்தவிர, எதிர்க்கட்சிகளுக்கு பொதுவான பந்தம் எதுவும் இல்லை. அதுவும், அவர்களை பலமாக இணைக்கவில்லை. காங்கிரசை மாயாவதி விமர்சிப்பதும், மம்தாவை ராகுல் கண்டிப்பதுமேசாட்சி. எதிர்க்கட்சிகளில் நாடு தழுவிய அடித்தளம் கொண்டகட்சி காங்கிரஸ் மட்டுமே. அதுவும் பலம் இல்லாத அடித்தளம். ‘நேரு, காந்தி பெயர்களுக்கு இருந்த கவர்ச்சி போய்விட்டதால், 2014 தேர்தலில் காங்கிரஸ் அடிவாங்கும்’ என்று, 2012ல், ஜகதிஷ் சந்திராவும் நானும் சேர்ந்து, ‘இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு கடைசிமணி ஒலிக்கிறது’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் சொன்னோம். இன்றைய நிலை அதைவிட மோசம்.

ஆட்சியை இழந்திருந்த ஐந்து ஆண்டுகளை, காங்கிரஸ் பயன் படுத்திக் கொள்ளவில்லை. நாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று, ஒரு புதிய செயல் திட்டத்தை தயாரித்து இருந்தால், இப்போது அதை சொல்லி பிரசாரம் செய்யலாம். அப்படி எதுவும் செய்யவில்லை. அதனால், ‛சவுக்கிதார் சோர் ஹை’ என்ற ஒருகோஷத்தை மட்டும் நம்பி, ராகுல் பிரசாரம் செய்ய வேண்டியிருக்கிறது. மிக தாமதமாக, வறுமை ஒழிப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அது சாத்தியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். தவிர, இலவசம் எதையும் கொள்கைத் திட்டமாக ஏற்கமுடியாது.

 

ஐந்தாவது காரணமே, ராகுலின் அந்த கோஷம்தான். ‛சவுக்கிதார் சோர் ஹை’ என்று, அவர் திரும்பத்திரும்ப சொல்கிறார். கேட்பவர்கள் மனதில் என்ன தோன்றும்? சரியான சவுக்கிதாராக இருக்கிறாரே, மோடி என்றுதான், நினைப்பார்கள். ஏன் என்றால், உயர்மட்டத்தில் இந்த ஐந்தாண்டுகளில் ஒரு ஊழல் கூட நடக்காமல் பார்த்துக்கொண்டார் அவர். மோடி வந்து இந்தியாவில் ஊழலை ஒழித்து விட்டார் என்று சொல்லவில்லை. என்றாலும், ஊழலுக்கு எதிராக யுத்தம்செய்யும் ஒரு வீரனாக மோடியை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அரசுசேவைகளை டிஜிட்டல்மயம் ஆக்கியதால், சர்டிபிகேட் கொடுப்பது மாதிரியான சின்ன சேவைக்குக்கூட கையூட்டு எதிர்பார்த்த அதிகாரிகளின் பிடியில் இருந்து சாமானிய மக்களுக்கு விடுதலை கிடைத் திருக்கிறதா இல்லையா?

கடைசியாக, ஆறாவது காரணம். மக்களின் அன்றாட வாழ்க்கையை தொடுகிற பலவிஷயங்களில் மோடி கொண்டுவந்த சீர்திருத்தம். மிக முக்கியமான மூன்று பொருளாதார நடவடிக்கைகளை சொன்னாலே போதும். திவால் சட்டம், ஜிஎஸ்டி., நேரடிமானியம். இவற்றின் பலன்களை விவரிக்க தேவையில்லை; மக்களே அனுபவிக்கிறார்கள். ஸ்வாச் பாரத், ஜன்தன் யோஜனா, ஆதார் ஆகியவற்றையும் அந்த பட்டியலில் சேர்த்தால், பிரமாண்டமான திட்டங்களை தைரியமாக செயல்படுத்தும் ஆற்றல் மோடிக்கு இருப்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் மோடி எல்லோரையும் மிஞ்சிவிட்டார். சாலை, ரயில், விமானம், நீர்வழி என எல்லா வகையான போக்குவரத்து திட்டங்களும் நேரடி சாட்சிகளாக நிற்கின்றன.

சிறு வியாபாரிகளையும், நகர்ப்புற வாக்காளர்களையும் விட்டால், பா.ஜ.,வுக்கு ஏது ஆதரவு என்றுகேட்ட காலம் உண்டு. மோடி அதைத் தாண்டி, காங்கிரசின் பாரம்பரிய ஆதரவுக் களத்தை அபகரித்து விட்டார். கிராமப்புற இந்தியா எப்போதும் காங்கிரஸ்பக்கமே இருந்து வந்திருக்கிறது. விவசாயிகளையும், கிராமத்து ஏழைகளையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களின் வாயிலாக, அந்த ஆதரவை தன்பக்கம் இழுத்துவிட்டார் மோடி. விவசாயிகளுக்காக பயிர் காப்பீடு, நீர்ப்பாசன விரிவாக்கம், நேரடிமானிய பரிவர்த்தனை, தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டங்களை கொண்டு வந்தார். ஏழைகளுக்காக இனைப்பு சாலைகள், டிஜிட்டல் இணைப்பு, மின்மயம், வீடுகள், கழிப்பறை, சுத்தமான எரிவாயு, வேலை வாய்ப்பு உறுதி திட்டங்களை செயல் படுத்தினார். இப்போது சொல்லுங்கள், மோடியைத் தவிர வேறு எவரும் இந்த தேர்தலில் வெல்ல முடியுமா என்று.

-அரவிந்த் பணகரியா,
கொலம்பியா யுனிவர்சிடி பேராசிரியர்,
முன்னாள் நிடி ஆயோக் துணை தலைவர்.

Leave a Reply