பா.ஜனதா கட்சியின் தேசியசெயலாளர் எச்.ராஜா கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

கடலூரில் ஆனந்த் என்ற இளைஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைசேர்ந்த 3 பேர் மண்எண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்ததாக தகவல்கள் வருகிறது. ஆனால் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக மட்டும் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவத்தில் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவைக்கு ஸ்மார்ட் திட்டத்தில் மத்தியஅரசு 1560 கோடியை ஒதுக்கி உள்ளது. இந்தியாவில் மொத்தம் அறிவிக்கப்பட்ட 100 ஸ்மார்ட்சிட்டிகளில் தமிழகத்துக்கு மட்டும் 13 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது.

மோடி அரசு தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு கொட்டி, கொட்டிகொடுக்கிறது. சமீபத்தில் மத்திய மந்திரி நிதின்கட்காரி கூட தமிழகத்துக்கு மட்டும் 1 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். ஆனால் கோவைக்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முதன்மை செயல் அதிகாரி கூட நியமிக்காத நிலைதான் உள்ளது. எனவே தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஆவன செய்யவேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் கழிவறைகட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கையெழுத்து வாங்குவதற்கு லஞ்சம்கேட்பதாக புகார்கள் வருகிறது. மத்திய அரசின் வீட்டுவசதி திட்டத்திலும் பயனாளிகளிடம் ரூ. 30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக எனக்கு புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை இந்து அறத்தை அழிக்கும் துறையாக மாறியிருப்பது கண்டிக்கத்தக்கது. பல்வேறு கோவில்களில் பூஜைகள் நடத்தப் படாமலே உள்ளது. இந்த அரசாங்கம் இந்து அறநிலையத் துறையை கவனிக்கவில்லை.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்து 420 கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு சம்பளம்கிடையாது. ஆனால் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிகமாக சம்பளம் வழங்கப் படுகிறது. 50 ஆண்டுகால திராவிட ஆட்சியால்தான் இந்து அறநிலையத் துறை இவ்வாறு செயல்படுகிறது. கோவில்களை நிர்வகிக்க முடியா விட்டால் இந்து அறநிலையத் துறை கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்.

மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதிசெய்ய மாநில அரசு அனுமதி வழங்கவேண்டும். நியூட்ரினோ, நெடுவாசல் போன்ற விஞ்ஞான பூர்வமான திட்டங்களை விஞ்ஞானிகளிடமே விட்டுவிடுவோம். மத்திய அரசை பொறுத்தவரை எந்த ஒரு திட்டத்தையும், மாநில அரசும், மக்களும் ஏற்றுகொள்ளா விட்டால் அதை செயல்படுத்த மாட்டோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். மணல் குவாரிகள் பொறுத்தவரை இறுதிமுடிவு வரட்டும். அதற்கு பிறகு பேசலாம்.

பா.ஜனதாவை பொறுத்தவரை அகில இந்தியகட்சி பா.ஜனதா. ஒரு தேர்தலில்போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தனிப்பட்ட முறையில் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன். கேரள இளம்பெண் விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply