பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கூட்டத் தொடர் நடைபெறுகிறபோதும் ஏதேனும் ஒரு விவகாரத்தில் இரு சபைகளும் முடங்கிப்போவது சமீபகால வரலாறாக மாறி வருகிறது. அந்த வகையில் இந்த குளிர்கால கூட்டத்தொடர், குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது பிரதமர் நரேந்திரமோடி கூறியதாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய புகாரால் முடங்கி வருகிறது.

பிரதமர் மோடி தனது பிரசாரத்தின்போது குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட காங்கிரஸ் அனுமதித்ததாகவும், இதில், காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் எம்.பி. வீட்டில் நடந்த ஒருகூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் தூதரக முன்னாள் உயர் அதிகாரிகளை சந்தித்து சதிசெய்ததாகவும் குற்றம் சாட்டியதாகதான் பிரச்சினை எழுந்துள்ளது.

பாராளுமன்ற மக்களவை நேற்று வழக்கம்போல கூடியதும் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே தலைமையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தபிரச்சினையை எழுப்பி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நோக்கி, ‘‘மன்மோகன் சிங் பற்றிய குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என முழக்கங்களை எழுப்பினர்.

அவர்களின் அமளிக்கு மத்தியில் கேள்விநேரத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடத்தினார். ஆனால் சபையில் எதுவுமே கேட்கவில்லை. இதனால் சபை அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் சபை கூடியபோது, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பூஜ்ய நேரத்தைதொடர முயற்சித்தார். ஆனால் நிலைமையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் மையப் பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அமளிக்கு மத்தியில் பூஜ்ய நேரத்தில், பாரதீய ஜனதா உறுப்பினர்களும், பிற உறுப்பினர்களும் பல்வேறு பிரச்சி னைகளை எழுப்பினர்.

அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, சபா நாயகரிடம் ஏதோ கூற அவர் பேச அனுமதி மறுக்கப் பட்டது. உடனே அவர் தனதுகட்சி எம்.பி.க்களுடன் சபையில் இருந்து வெளி நடப்பு செய்தார்.

இது பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி அனந்த் குமாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

அப்போது அவர் ‘‘காங்கிரஸ் கட்சியினர் செயல் வெட்கக் கேடானது; கண்டனத்துக்கு உரியது. மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க் கட்சியினரின் கேலிக் கூத்தான செயல்பாடுகள், சபைத் தலைவரை அவமதிப்பதாகும். இனியாவது நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். இத்தகைய செயல்களை எதிர்காலத்தில் தவிர்ப்பார்கள் என நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் டெல்லி மேல்–சபையில் தொடர்ந்து 3–வது நாளாக எதிரொலித்தது.

கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

அப்போது சபையின் தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘இந்தபிரச்சினை குறித்து அவர்கள் (மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்) என்னை சாதாரண முறையில் சந்தித்து பேசினர். சபை சரிவர செயல் படாமல் இருப்பது நாட்டுக்கு நல்ல தல்ல என்பது என் கருத்து. பல்வேறு கட்சி தலைவர்கள் இங்கு உள்ளனர். பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி, சபை முன்னவர், எதிர்க்கட்சி தலைவர் போன்றோர் உள்ளனர். பிரச்சினை குறித்து நமக்குள் பேசி ஒருதீர்வுக்கு வரலாம். பாராளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

அதற்கு குலாம் நபி ஆசாத், ‘‘சபைத் தலைவரின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கூடி பேசலாம்’’ என்றார். சபைமுன்னவர் நிதி மந்திரி அருண்ஜெட்லி, ‘‘பிரச்சினைக்கு தீர்வுகாண ஒரு குழுவை அமைக்கலாம்’’ என கூறினார்.

இது எதிர்க் கட்சியினரால் ஏற்கப் பட்டுள்ளதால் மேல்சபையில் முட்டுக் கட்டை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply