பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பின் போது ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகாது என்று சீனத்தரப்பு தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், இந்த சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஷீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக சீனாவுக்கு வரும் 27-ஆம் தேதி செல்லவிருக்கிறார். மத்திய சீனாவில் உள்ள உஹான் நகரில் இந்தசந்திப்பு நடைபெறவுள்ளது. ஆசியக் கண்டத்தில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள இருநாடுகளின் தலைவர்கள் சந்திப்பு குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே காலம் காலமாக எல்லைப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இருதலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை எந்தெந்த விஷயங்கள் சார்ந்து அமையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இதனிடையே, இந்த சந்திப்பு குறித்து சீன வெளியுறவுத்துறை இணையமைச்சர் காங் சியாங்யூ கூறியதாவது: ஷீ ஜின்பிங்- மோடி சந்திப்பின்போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட மாட்டாது. இதனை இரு தரப்பும் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளன. ஏனெனில், இந்த சந்திப்புகுறித்து முன்னதாகவே பெரிய அளவில் திட்டமிடப்படவில்லை. அவ்வாறு திட்டமிடப்பட்டிருந்தால் இரு நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், அமைச்சர்கள் முன்னதாகவே சந்தித்து கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுத்து இருப்பார்கள்.


ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை என்பதால் இந்தசந்திப்பின் முக்கியத்துவம் எவ்விதத்திலும் குறைந்து விடாது. இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேச இருக்கிறார்கள். இந்தியா-சீனா இடையே பரஸ்பரம் நம்பிக்கையை அதிகரிப்பது, பல்வேறு விஷயங்களில் ஒருமித்தகருத்தை ஏற்படுத்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.


டோக்காலாம் எல்லைப் பிரச்னை குறித்து இந்த சந்திப்பில் பேசப்படுமா என்ற கேள்விக்கு, 'எல்லை பிரச்னையைப் பொருத்த வரையில் இரு நாடுகளுமே பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா-சீனா நல்லுறவு மேம்படவேண்டும் என்பதில் இரு தலைவர்களுமே முழு ஆர்வம் கொண்டுள்ளனர். மோடியும், ஷீ ஜின்பிங்கும் பல்வேறு தருணங்களில் 10 முறை சந்தித்துள்ளனர். எனவே, அவர்களுக்குள் தனிப்பட்ட முறையிலும் நல்லபுரிதல் உள்ளது. மேலும், இருவரும் தங்கள் நாடுகளில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள். எனவே, இந்திய-சீனமக்களின் ஒருங்கிணைப் பாகவும் இந்தசந்திப்பு அமையும்' என்று அவர் பதிலளித்தார்.

Leave a Reply