கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மோட்டார்வாகன சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதன்கீழ் அபராதம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது? என தெரிந்தால் இனி வாழ்க்கையில் ஒருபோதும் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட மாட்டீர்கள்.

இந்திய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான விபத்துக்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு என கணக்கிட்டால், சராசரியாக 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதன்காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை வாகனஓட்டிகள் முறையாக பின்பற்ற தவறுவதே சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியிருக்க முக்கியமான காரணம். போக்குவரத்து விதிகளை மீறும்வாகன ஓட்டிகளுக்கு இந்தியாவில் இதுவரை பெரிய அளவிலான தண்டனை கிடைக்காமல் இருந்துவந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட அலட்சியமே போக்குவரத்து விதிகளை மீறுவதற்குவாகன ஓட்டிகளை தூண்டியது என சொல்லலாம்.

ஆனால் இனி வாகன ஓட்டிகள் அவ்வளவு எளிதாக போக்குவரத்து விதிமுறைகளை மீறமுடியாது. மீறினால் கடுமையான அபராதங்களை செலுத்தநேரிடும். மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகனசட்ட திருத்த மசோதாவே இதற்கு காரணம். மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தீவிரம் காட்டி வந்தார்.

ஆனால் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்பது உள்பட பல்வேறு காரணங்களை காட்டி, எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த சூழலில் ஒருவழியாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று (ஜூலை 23) நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலமாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் திருத்தியமைக்கப் பட்டுள்ளன. அதாவது அபராத தொகை முன்பை காட்டிலும் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி பழையஅபராதம் எவ்வளவு? திருத்தியமைக்கப்பட்ட புதிய அபராதம் எவ்வளவு? என்பதை விரிவாக பார்க்கலாம்.

வாகன ஓட்டிகள் பொதுவான குற்றங்களில் ஈடுபட்டால், செக்ஸன் 177ன்படி முன்பு 100 ரூபாய் மட்டுமே அபராதம்விதிக்கப்பட்டு வந்தது. இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமை என்ற குற்றத்திற்கு, செக்ஸன் 179ன் கீழ் பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான். ஆனால் புதிய அபராததொகை 2,000 ரூபாய்.

லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு முன்பு செக்ஸன் 181ன் கீழ் 500 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுவந்தது. ஆனால் இனி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், 5,000 ரூபாய் அபராதம்கட்ட வேண்டியதிருக்கும். அதேநேரத்தில் வாகனங்களை அதிவேகமாக இயக்குபவர்களுக்கு செக்ஸன் 183ன்படி முன்பு 400 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இனி வாகனங்களை அதிவேகமாக இயக்கினால், இலகுரக மோட்டார் வாகனம் என்றால் 1,000 ரூபாயும், மீடியம்பாசஞ்சர் வாகனம் என்றால் 2,000 ரூபாயும் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அதேநேரத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் முன்பு செக்ஸன் 185ன் கீழ் 2,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. தற்போது இது அதிரடியாக 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது சாலைகளில் ரேஸிங்கில் ஈடுபடுப வர்களுக்கான பழைய அபராததொகை 500 ரூபாய் மட்டும்தான் (செக்ஸன் 189). ஆனால் புதிய அபராததொகை 5,000 ரூபாய். பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு முன்பு செக்ஸன் 192ஏ-ன் கீழ் 5,000 ரூபாய் வரை மட்டுமே அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும். ஆனால் இந்த குற்றத்திற்கான புதிய அபராத தொகை 10,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஓவர்லோடு. வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்பவர்களுக்கு முன்பு செக்ஸன் 194ன் படி வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுவந்தது. இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் ஓவர்லோடிங் குற்றத்திற்கான புதிய அபராத தொகை 20,000 ரூபாய் என ஒரேஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு முன்பு செக்ஸன் 194பி-ன் படி 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. இதுதற்போது 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு செக்ஸன் 196ன் கீழ் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுவந்தது. இது தற்போது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்புவாகனங்கள் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்கள் வந்தால் வழி விடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் நிச்சயமாக நல்லது. தொடர்ந்து கடைபிடியுங்கள்.

ஒரு வேளை அப்படிப்பட்ட ஒருநல்ல பழக்கம் உங்களுக்கு இல்லாவிட்டால், இனியாவது பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விடாவிட்டால், செக்ஸன் 194இ-ன் படி உங்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சரி, தண்டனை எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

இது அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் பொருந்தும். ஆம், இந்த விதிமுறைகளை அமல்படுத்த கூடிய அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதில், விசேஷம் என்னவென்றால், அந்த அதிகாரிகள் என்ன தவறு செய்தாலும், அந்த குற்றத்திற்கு சாதாரண வாகன ஓட்டிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறதோ, அதை விட இரு மடங்கு அதிக அபராதம் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியது. ஏனெனில் கரிசணம் காட்டி கொண்டே இருப்பதால்தான் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்து கொண்டே உள்ளனர். இனி ஒரு முறை அபராதம் செலுத்தி விட்டால், அடுத்த முறை அந்த தவறை செய்ய வாகன ஓட்டிகள் சிந்திப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ஒருசில வாகன ஓட்டிகள் வேண்டுமென்றே தவறு செய்கின்றனர். நாம் செய்வது தவறு என அவர்களுக்கும் தெரியும். இருந்தும் அதனை செய்கின்றனர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் விதிதெரியாததால், வாகன ஓட்டிகள் அதனை மீறிவிடுகின்றனர். சாலையில் லேன் மாறுவது இதற்கு ஒரு உதாரணம்.

பல அனுபவம் வாய்ந்த டிரைவர்களுக்கு கூட லேன்மாறுவது தொடர்பான விதிகள் குறித்து விழிப்புணர்வு இல்லை. எனவே லேன் மாறுவதில் குளறுபடி காணப்படுகிறது.இந்தியாவில் உள்ள பலரும் லேன் அடிப்படை விதிகள் குறித்துகூட அறியாமல் இருக்கின்றனர். இந்த விதியை கடை பிடிப்பதால் பல விபத்துக்களை தவிர்க்கலாம். எனவே காரில் செல்லும் போது எப்படி லேன் மாற வேண்டும் என இனி பார்க்கலாம். அதற்கு முன்னதாகலேன் குறித்த சில அடிப்படை தகவல்களை பார்த்து விடுவோம்.

இந்தியாவில் நெடுதூரம் பயணம் செய்யும் கிட்டத்தட்ட எல்லா ஊர்களும் நான்கு வழிச்சாலையில் இணைக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் நான்குவழிச்சாலையில் பயணிக்காதவர்களை பார்ப்பதே அரிது. இந்த நான்கு வழிச்சாலை என்பது இரண்டு வழி ஒரு புறம் , இரண்டு வழி மறுபுறம் செல்லும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில் இடது பக்கம் உள்ளலேன் சாதாரணமாக வாகனங்கள் செல்வதற்கும் வலது பக்கம் உள்ள லேன் முன்னால் செல்லும் வாகனங்களை விட பின்னால் வரும் வாகனங்கள் வேகம் அதிகமாக இருந்தால் அவர்கள் ஓவர் டேக் செய்வதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் நீங்கள் 4 வழிச்சாலைகளில் செல்லும்போது உங்களுக்கான இரண்டு வழிகளில் இடதுபுறத்தை தான் அதிகம் பயன்படுத்த வேண்டும்.வலது புற ரோட்டில் எக்காரணத்தை கொண்டும் நீண்ட நேரம் செல்ல கூடாது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மட்டும் முழுவதும் வலதுபக்க லேனிலேயே செல்ல அனுமதியுள்ளது. மற்ற வாகனங்கள் இந்த வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து வழி விட வேண்டும். தெடர்ந்து வலதுபுறம், இடதுபுறம் என மாறி மாறி வாகனத்தை கொண்டு செல்வது விபத்திற்கு வழிவகுக்கும்.

One response to “மோட்டார்வாகன சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது”