மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், 12 அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. இதன்மூலம், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டோரை தூக்குதண்டனைக்கு உட்படுத்தும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
இந்த மசோதாவை அம்மாநில சட்டத் துறை அமைச்சர் ராம்பால் சிங், பேரவையில் அறிமுகம் செய்திருந்தார். 


மசோதா குறித்து பேரவையில் விரிவாக விவாதம் நடத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து ஆளும் பாஜக, எதிர்க் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மசோதா திங்கள் கிழமை நிறைவேற்றப்பட்டது. 


அடுத்ததாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் பின் இது சட்டமாகி விடும் என்றும் மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் சட்டப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், "இது மத்தியப் பிரதேசத்துக்கு ஒருவரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். ஏனெனில், 12 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பலாத்காரம்செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் விருப்பப்படி பேரவை நிறைவேற்றியுள்ளது' என்றார்.


மசோதாவை வரவேற்று, முதல்வர் சௌஹான் கூறுகையில் "கடுமையான தண்டனைகள் மூலம் மட்டுமே கட்டுப்படக்கூடிய நபர்கள் சமூகத்தில் உள்ளனர். இந்தமசோதா அவர்களைக் கையாளும். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக நாம் சமூகத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோம்' என்றார்.

Leave a Reply