பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றமே முன்னேற்றம் தரும் என்ற கோஷத்தோடு மக்களை பா.ஜனதா சந்திக்கபோகிறது. முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். 2 விஷயங்களை நீங்கள் மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த சந்திப்பு.

முதலாவது, யாருமே பார்க்கமுடியாத- தொடர்பு கொள்ள முடியாத முதல்-அமைச்சர் ஒருவர்தான் தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார் என்று மத்திய மின்துறை மந்திரியே குற்றம்சாட்டி இருக்கிறார். இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஏனென்றால், இதனால் தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டிய நலன்கள், நலத்திட்டங்கள் என்று எதுவுமே கிடைக்காமல் போய்விட்டது. ஜெயலலிதாவால் தமிழக அரசின் நிர்வாகம் அபாயநிலையில் உள்ளது.

இந்த அபாயநிலையில் இருந்து தமிழகத்தை மீட்க, பா.ஜ.க.,வால் மட்டுமே முடியும். புதிதாக இந்ததேர்தலில் 1 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் அனைவரும், பா.ஜ.க.,விற்கு தான் ஆதரவாக உள்ளனர்.

இரண்டாவது விஷயம், தீவிரவாதிகளிடம் அதிமுக. அரசு மென்மையான போக்கினை கடைபிடிக்கிறது. இப்படி நான் கூறுவதால், முஸ்லிம்களுக்கு எதிரானவன் என்று சொல்லிவிட வேண்டாம்.

இந்த தீவிரவாதிகளால் முஸ்லிம்களுக்கே பாதிப்புதான் ஏற்படுகிறது. இந்த தீவிரவாதிகளால், பா.ஜனதா மற்றும் இந்துமுன்னணி தவிர பொதுமக்கள், போலீசாரே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நாங்கள்சொல்லும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தேர்தலுக்காக சொல்லவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. அரசு ஊழல்கறை படிந்தது என்பதனை சொல்லி வருகிறோம். எங்கள் கட்சி தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் பங்கேற்ற முதல் பொது கூட்டத்திலேயே, தமிழகம் ஊழல்பிடியில் சிக்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply