36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக ஏற்படுத்தப் பட்ட ஒப்பந்தம் மத்திய அரசின் தைரியமான முடிவு என விமானப் படைத் தளபதி பிரேந்தர்சிங் தனோவா தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதுதொடர்பாக மத்திய அரசு தைரியமாக முடிவெடுத்தது. இதன் மூலம் மிக அதிநவீன, சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு கிடைத்துள்ளன. இதில் ரஃபேல் ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பாக குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட நிலைவரை எங்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் விமான ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் 3 வழி இருந்தன. அதில், ஏதேனும் சரியாக நடக்கும்வரை பொறுமையுடன் இருப்பது அல்லது இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்குவது அல்லது உடனடியாக போர் விமானங்களை கொள்முதல் செய்வதாகும். எனவே உடனடியாக கொள்முதல்செய்ய முடிவு செய்யப்பட்டது. 

ஹால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பாக சுகோய்-30 போர் விமானத்தில் 3 வருடங்கள், ஜாகுவாரில் 6 வருடங்கள், எல்சிஏ-வில் 5 வருடங்கள், மிரேஜ் 2000 மேம்பாட்டில் 2 வருடங்கள் என கால தாமதம் ஏற்பட்டது. 

ரஃபேல் போர் விமானங்கள் மட்டுமல்லாமல் ரஷியாவுடன் எஸ்-400 ஒப்பந்தம் மூலம் இந்திய விமானப் படையின் தரம் உயரும். மேலும் ரஷிய அதிபர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட 24 மாதங்களுக்குள் இந்திய விமானப் படையில் பயன் பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.  

Leave a Reply