ரயில் பயணியரிடம், எம்.டி.ஆர்., கட்டணம் வசூலிக்கப் படும் நடைமுறையை கைவிட, மத்திய அரசு தீவிரமுயற்சி எடுத்து வருவதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ்கோயல் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரயில் பயண கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தை பயன்படுத்தி, ஆன் – லைனில், ரயில் பயண டிக்கெட் முன்பதிவுசெய்யும் போது, எம்.டி.ஆர்., எனப்படும், 'மெர்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போதைய நடைமுறைகளின்படி, 1,000 ரூபாய் வரை யிலான தொகைக்கு, 0.25 சதவீத கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ரயில் பயணியருக்கு நன்மை செய்யும் வகையில், எம்.டி.ஆர்., கட்டண வசூல் நடைமுறையை, விரைவில்கைவிட, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், விரைவில், ரயில் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.