காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஹிந்துபோல் வேடமிடுவதாகவும்  பிரதமர் மோடி மீது சர்ச்சைகுரிய கருத்துதெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமெனவும் பாஜக விமர்சித்துள்ளது. 


பல்வேறு ஹிந்து கடவுள்களின் கோயிலுக்குச்சென்று வழிபட்டு வரும் ராகுல் காந்தி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனிலுள்ள மஹா கலேஷ்வர் கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு செய்தார்.


இது குறித்து, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்ததாவது:
ராகுல் ஹிந்து போல் வேடமிட்டு, மக்களை ஏமாற்றமுயல்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பிறகு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு, ஹிந்து மக்களைக் கவரும் வகையிலான செயல்களில் காங்கிரஸ் ஈடுபடவேண்டும் என்று கூறியதன் காரணமாக ராகுல் பல்வேறு கோயில்களுக்குச் சென்று வருகிறார்.

ராகுலின் நெருங்கிய நண்பரான சசி தரூர், அவருடைய சர்ச்சைக்குரிய கருத்தின் மூலம், பிரதமர் மோடியையும், ஹிந்துமக்களால் பக்தியுடன் வழிபடப்பட்டு வரும் சிவனையும் அவமானப்படுத்தி உள்ளார். அப்படியிருக்கும் வேளையில், ராகுல் அதே சிவனை கோயிலுக்கு சென்று வழிபடுவது எவ்வகையில் நியாயம்?

அவர் இவ்வாறு நடந்து வரும் வேளையில், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் தொடர்ந்து ஹிந்துமக்களைக் காயப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி சிவலிங்கம் மீது அமர்ந்துள்ள தேள் போன்றவர் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

Leave a Reply