ரஃபேல் வழக்கின் தீர்ப்பை தவறாகத்தெரிவித்தது தொடர்பாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த விளக்கத்தை ஏற்கமறுத்த உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தீர்ப்புகுறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வுமனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களையும், நாளேடு ஆதாரங்களையும் ஏற்கலாம் எனத் தெரிவித்திருந்தது. விரைவில்  விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.

அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்புகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில்அளித்த ராகுல் காந்தி, “காவலாளி என கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது” என தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார் போல் ராகுல் பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது. இதனால்,  மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். .

இந்தமனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாங்கள் ராகுல்காந்தி கூறிய கருத்துகளைப் போல் ஏதும் கூறவில்லை. ராகுல் காந்தி தனது பேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை வரும் 22-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். 23-ம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “ரஃபேல் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் போது பிரச்சாரத்தில் இருந்தபோது பேசிவிட்டேன். ஆனால், தீர்ப்பின்சாரம்சம் தெரியாமல் பேசிய என்னுடைய வார்த்தைகளை எதிர்க் கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை, மாண்புகளை மதிக்காத வகையில் செயல்படவேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப் பட்டவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக்குப்தா, சஞ்சய் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜரானார். ராகுல்காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகினார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாகப் பேசியதற்காக ராகுல் காந்தி ஒருவார்த்தைகூட மன்னிப்பு கோரவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவுகளை சரிவரப் படிக்காமல், பிரச்சாரத்தில் இருந்தபோது தெரிவித்ததாகக் கூறியுள்ளார். மன்னிப்பு கோராமல் வருத்தம் தெரிவிப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார். ஒரு அரசியல் கட்சியின் பொறுப்புள்ள பதவியில் இருந்துகொண்டு எவ்வாறுபேச முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ராகுல் காந்தி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ” ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது இதைப் பேசியுள்ளார். அந்தத்தீர்ப்பை விரிவாக அவர் படிக்கவில்லை. ஆய்வு செய்யவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து விட்டார். ஆதலால் வழக்கை முடிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், ராகுல் காந்தி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

ராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவமதிக்கு உரியதுதான். அவருக்கு அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். வரும் 30-ம் தேதி இந்தவழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். அப்போது, கடந்த டிசம்பர் 14-ம் தேதி அளிக்கப்பட்ட ரஃபேல் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவுடன் இந்தவழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

Leave a Reply