மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புபடை தலைமை இயக்குநரிடம் கேட்டறிந்தார். 

ஒகி புயல் தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளாமாநிலத்தின் பல பகுதிகளை புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. புயல்பாதிப்பிற்குள்ளான அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுவரை கன்னியாகுமரியில் மட்டும் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடலுக்குள்சென்ற 18 கன்னியாகுமரி மீனவர்கள் மற்றும் 150 கேரள மீனவர்கள் திரும்பவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புயல் பாதித்துள்ள பகுதிகளில் தேசியபேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கூடுதலாக மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்புகளை சரிசெய்யும் பணியில் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஒகிபுயல் நிலவரங்களை கண்காணித்து ‌வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் புயல்பாதிப்புகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புபடை தலைமை இயக்குநரிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்துள்ளார். தகவல்களின் அடிப்படையில் வெள்ளப்பாதிப்பு நிதி மற்றும் பாதிப்படைந்த பகுதிகளுக்கான மீட்புநடவடிக்கை நிதியை மத்திய உள்துறை ஒதுக்கீடு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply