மத்திய அமைச்சரவையில் இடம் பெறாத ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக.,வின் தலைமை பொறுப்பு வழங்கப் படவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை மோடி அமைச்சரவையில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த ரத்தோர் இம்முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

இது சர்ச்சை பொருளாக விவாதிக்கப் பட்டது. இளம் முகம், ஒலிம்பிக் சாம்பியன், நன்றாக பணியாற்றியவருக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், அவருக்கு அதற்குப் பதிலாக ராஜஸ்தான் பாஜகவின் தலைமைபொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத்தழுவியது. இதனால் மாநிலத் தலைமையை மாற்ற வேண்டும் என பாஜக முடிவுசெய்துள்ளது. இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ., கஜேந்திரசிங் ஷெகாவத் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவரை முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே உள்ளிட்டவர்கள் ஏற்கவில்லை. உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவரை அப்பதவியில் அமர்த்தினால் மற்ற சமூகத்தினருடன் தொடர்பற்றுபோகும் எனக் கூறினார்.

இதனால், அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ள ராஜ்யவார்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக தலைமை பொறுப்பு வழங்கப்பட அதிகவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ராஜ்யவர்தன் ரத்தோர் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண பூணியாவை 3.89 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments are closed.