சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை கிழக்கு கடற்கரைச்சாலையில், ஏப்ரல் 11-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, வரும் 12-ம்தேதி, பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வரவிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக்கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தைப் பகுதியில், 11-ம் தேதிமுதல் 14-ம் தேதிவரை இந்திய பாதுகாப்பு துறை சார்பாக 'பாதுகாப்புக் கண்காட்சி 2018' நடைபெற இருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட 42 நாடுகள் இதில் கலந்து கொள்வதாக அறிவித் திருக்கின்றன. இந்தியாவை உலகின் முக்கியபாதுகாப்பு உற்பத்தி மையமாகக் காட்சிப்படுத்துவதே பாதுகாப்புக் கண்காட்சியின் நோக்கமாகும். இந்த கண்காட்சியில், உள்நாட்டுத் தொழிற்சாலைகள் தங்களது உள்நாட்டு உற்பத்தித் தடவாளங் களையும், பகுதிப் பொருள்களையும் காட்சிக்குவைக்க உள்ளன. இதற்காக, கிழக்குக் கடற்கரைச் சாலை அருகில் 400 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு, ரூ.463 கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

பிரமாண்ட கண்காட்சி அரங்குகள், கடலில் நடக்கும் சாகசங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காக, பார்வையாளர் மாடங்கள் உள்ளிட்டவை அமைக்கும்பணிகள் கடந்த ஒருமாதமாக நடைபெற்றுவருகின்றன. சுமார் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கண் காட்சி நடைபெற இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மும்பை, டேராடூன் ஆகிய இடங்களிலிருந்து பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை ராட்சதகன்டெய்னர் லாரிகள்மூலம் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். சிஐஎஸ்எப் பாதுகாப்புப் படையினர், கண்காட்சி வளாகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்  வளாகம் கண்காணிக்கப் படுகிறது.

ஏப்பல் 12-ம் தேதி, பிரதமர் மோடி தமிழகம்வருவதை பிரதமர் அலுவலகம் உறுதிசெய்துள்ளது. டெல்லியிலிருந்து தனிவிமானம்மூலம் காலை 9.20-க்கு சென்னை விமான நிலையத்துக்கு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் வந்து, அங்கிருந்து திருவிடந்தைக்கு கார் மூலம் செல்கிறார். காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு மதியம் 1 மணிக்கு சென்னை கேன்சர் இன்ஸ்டிட்யூட் வைர விழாவில் கலந்து கொள்ளும் மோடி, மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்படுகிறார்.

Leave a Reply