நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 123 கிமீ. தூரத்தில் குரெஸ் ராணுவமுகாம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக இங்குவந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துபேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.
2015-ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை இமாச்சலபிரதேச மாநில எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
அதை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு மீண்டும் குரெஸ் ராணுவ முகாமிலும் 2018-ம் ஆண்டு உத்தர காண்ட் மாநிலம் ஹர்சில் எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடனும் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
இந்நிலையில், தீபாவளி நாளான இன்று காஷ்மீரின் ரஜோரிமாவட்ட எல்லைப்பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.
முதலில் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்களில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நிறுவப் பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது ஒருபாரம்பரியம் . அதை ராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆகவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் தான் என் குடும்பம். நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன.

ஆனால் நீங்கள் இருக்கும் இந்தபகுதி தனித்துவமானது. போர் , ஊடுருவல் உட்பட அனைத்தையும் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்த பகுதி தோல்வியை பார்த்திராத பகுதி. வெல்ல முடியாத பகுதி. தற்போது நேரம் மாறிவிட்டது. நமது ஆயுதப் படைகள் நவீனமாக இருக்க வேண்டும்.நமது ஆயுதங்களும் வெடி மருந்துகளும் நவீனமாக இருக்க வேண்டும். நமதுவீரர்களின் முகங்களில் எந்த விதமான அழுத்தங்களும் இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

அவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஷ்மீரை கைப்பற்று வதற்காக 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியபடைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் முதல் படைப் பிரிவு 27-10-1947 அன்று காஷ்மீருக்கு நுழைந்தது.
அந்த நாளை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி ‘இன்பான்ட்டரி டே’ என்று நமது ராணுவ வீரர்களால் நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த  ‘இன்பான்ட்டரி டே’ தினமும் தீபாவளி பண்டிகையும் ஒரே நாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.