புதியராமர் கோயிலுக்கான பூமி பூஜை நாளை ( ஆகஸ்ட் 5ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், அயோத்திநகரமே மின்னொளிகளால் ஒளியூட்டப்பட்டு பூலோக சொர்க்கமாக மாறியுள்ளது. அயோத்தியில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் புதிய வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. வீட்டின் மேற்புறத்தில் காவிக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகைதரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. பூமி பூஜை நிகழ்வுக்கான ஆயத்தப் பணிகளை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 3ம் தேதி ஆய்வு செய்தார்.

ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதன் முதலாம்ஆண்டு நிறைவுநாள். 370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ராமர்கோயில் இரண்டும், பாரதிய ஜனதா அரசின் முக்கிய சாதனை . முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே இருந்தாலும், கூட்டணி தர்மத்தின் காரணமாக இதை செயல் படுத்த முடியவில்லை.

பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அந்த கனவை தற்போது நனவாக்கியுள்ளது. இதன்மூலமாக, 3 தலைமுறைகளுக்கும் மேலாக தடைபட்டுவந்த நிகழ்வு தற்போது நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு நபர்கள் அழைக்கபட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் குறைந்த அளவிலான விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்வுக்கு பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ள நிலையில், புஞ்ஜி டோலா பகுதியில் உள்ள 53 வயதான இக்பால் அன்சாரிக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை, இக்பால் அன்சாரிக்கு, ராமர்கோயில் கட்ட உள்ள ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் அனுப்பியுள்ளது.

இக்பால் அன்சாரியின் தந்தை ஹசீம்அன்சாரியே, ராம் ஜென்ம பூமி – பாபர் மசூதி வழக்கை தொடுத்திருந்தவர்களில் ஒருவர் ஆவார். இவர் சிலஆண்டுகளுக்கு முன் தனது 96வது வயதில், மரணமடைந்திருந்தார். இந்நிலையில், அவரதுமகன் இக்பால் அன்சாரிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம், அதன்பேரில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.

காயத்ரி தேவிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரோ வேறுவிதமாக இந்த நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவர். அதுயாதெனில், 1990ம் ஆண்டில் பாபர்மசூதியை இடிக்க கரசேவகர்கள் முயன்ற போது, கலவரத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயத்ரி தேவியின் கணவர் ரமேஷ் பாண்டே பலியானார். அவரது உடல், 3 நாட்கள்கழித்து பைலேன் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

எனது கணவரின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்தவிழாவிற்கான அழைப்பு தனக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நான் உறுதியாக கலந்துகொள்வேன். தனது மகன்களுக்கு திருமணம் செய்துவிட்டதாக கூறியுள்ள அவர், இந்தகோயில் கட்டுமான பிரிவில் தனது மகன் சுபாஷ் பணியாற்ற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமிபூஜை துவங்க இன்னும் 48 மணி நேரங்கள் கூட இல்லாத நிலையில், இந்த நிகழ்வின் மூலம் இந்தியவரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கப்பட உள்ளது.

Comments are closed.