இந்தியாவின் மூத்தவழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக, அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
‘ராம் ஜெத்மலானி’, இந்தப் பெயர் தமிழகம் உட்பட மொத்த இந்தியாவுக்கும் பரிச்சயமானஒன்று. வழக்குகள், அரசியல், சர்ச்சை என அனைத்துக்கும் பெயர்பெற்று துணிச்சலாகத் திகழ்ந்த மூத்தவழக்கறிஞர்.
95 வயதான இவர், பாகிஸ்தானின் சிந்த்மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் 1923-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பிறந்தார். பள்ளிக் காலத்தில் சிறந்து விளங்கியதால், தொடர்ந்து உயர்வுகள் பெற்று தன் 14 வயதில் மேல்நிலை கல்வியும் 17 வயதில் சட்டக் கல்வியும் படித்து முடித்தார். பின்னர், 18 வயதில் வழக்கறிஞராக வேலைக்கும் சேர்ந்து விட்டார். முதன் முதலாக தன் சொந்தஊரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கிய ராம் ஜெத்மலானி, அப்போதே கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல்வழக்கு, அஃப்சல் குரு வழக்கு, ஜெசிகா லால் கொலை வழக்கு, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம், , அமித் ஷாவின் சோராபுதின் என்கவுன்டர் வழக்கு, லாலு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு போன்ற பெரிய தலைவர்களின் முக்கிய வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார். 2010-ம் ஆண்டு, இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, பலஉயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்கள் என ஏராளமான முக்கிய வழக்குகளில் வாதிட்டு வெற்றிபெற்றுள்ளார். சட்ட துறையில் தைரியமாக சில கடிதங்களில் கையெழுத்திட்டு, துணிச்சலாக அதை எதிர் கொண்டவர்.
’வழக்கறிஞர் தொழிலிலிருந்து ஓய்வுபெற முடிவு எடுத்திருக்கிறேன். என் உயிர் உள்ளவரை, பொதுவாழ்வில் இருப்பேன். அரசியலில் ஊழலை ஒழிப்பது, என்புதிய பணியாக இருக்கும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக என் போராட்டத்தைத் தொடர்வேன். ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களுக்கு, ஆலோசனையையும் வழங்குவேன்’ எனக்கூறி, கடந்த 2017-ம் ஆண்டு தன் வழக்கறிஞர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
ராம் ஜெத்மலானிக்கு ரத்னா, துர்கா என இரண்டு மனைவிகளும் அவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களில், மகேஷ் ஜெத்மலானி மற்றும் ராணி ஜெத்மலானி ஆகிய இருவரும் பிரபலமான வழக்கறிஞர்கள். ராம்ஜெத்மலானியின் அரசியல் வாழ்க்கையும் அவரின் இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் மும்பையிலிருந்த போது, அதாவது இந்தியாவின் ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகவும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1995-ம் ஆண்டு, ’பவித்ர ஹிந்துஸ்தான் கழகம்’ என்ற புதிய கட்சியை உருவாக்கினார். ஆனால், அதற்கு பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை. பின்னர், 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராம் ஜெத்மலானி, தொடர்ந்து வீட்டிலேயே சிகிச்சைபெற்றுவந்தார். இதற்கிடையில், டெல்லியில் உள்ள தன் மகன் மகேஷ் ஜெத்மலா னியின் வீட்டில் உயிரிழந்தார்.