ராம நாமத்தை இந்தியாவில் உச்சரிக்காமல், பாகிஸ்தானிலா எழுப்ப முடியும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், மேற்குவங்கத்தில் மம்தாவின் வாகன அணிவகுப்பு சென்றபோது, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட மூன்றுபேரை காவல் துறையினர் பிடித்துச் சென்றனர். இதனைக் குறிப்பிட்டு தேர்தல் பிரசாரத்தில் மம்தாவை விமர்சித்த மோடி, மேற்குவங்கத்தில் மத வழிபாடுகள், பூஜைகளை மேற்கொள்வதற்குகூட மக்கள் இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்று உச்சரிப்பவர்கள், சிறையில் தள்ளப்படுகின்றனர். நான் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷ மிடுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்றார்.

மேற்கு வங்கத்தின் கட்டால் பகுதியில் செவ்வாய் கிழமை பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
ராமபிரான் இந்திய கலாசாரத்தில் ஓர் அங்கம். அவரதுபெயரை உச்சரிப்பதை நாட்டிலும் யாரும் தடுத்துவிட முடியாது. மம்தாவுக்கு நான் ஒருகேள்வி கேட்க விரும்புகிறேன். ராம நாமத்தை இந்தியாவில் உச்சரிக்காமல், பாகிஸ்தானுக்குச் சென்றா உச்சரிக்க முடியும்? மேற்கு வங்கம் இந்தியாவில்தானே இருக்கிறது.

மக்களவைத் தேர்தல் முடிவு வரும்நாளில் மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும். இங்குள்ள 42 தொகுதிகளில் 23 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெறுவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கு வங்கத்துக்கு ரூ.4 லட்சத்து 24 ஆயிரத்து 800 கோடி நிதியுதவி அளித்துள்ளது. ஆனால், இந்த உதவிகள் மக்களைச் சென்றடைய வில்லை. அதற்கு பதிலாக எங்குசென்றதை என்பது குறித்து மாநில முதல்வரிடம்தான் விசாரிக்க வேண்டும். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரம்கோடி மட்டுமே அளித்தது.

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக பலர் மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ளனர். அவர்களைக் கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் நடத்தப்படும் என்று அமித்ஷா பேசினார்.

Leave a Reply