வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில், அடுத்தமாதம் 2ம் தேதி ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிர கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

இது குறித்து இந்திய வானிலைத்துறை கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தமாகவும், அதன் பின்பும் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோர பகுதியை டிசம்பர் 2ம் தேதி நெருங்கும் வாய்ப்பு உள்ளது.

1) இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, ஆந்திர பிரதேசத்தின் தெற்கு கடலோர பகுதி, தெற்கு ராயலசீமா ஆகிய பகுதிகளில் டிசம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்.

2) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில், டிசம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதியில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2ம் தேதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி, ராயலசீமா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2ம் தேதி முதல் 3ம் தேதி வரை இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதிக்கு நவம்பர் 29ம் தேதியும், தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கும் 30ம் தேதியும், மன்னார் வளைகுடா, குமரி முனை, தமிழகம் மற்றும் கேரள கடலோர பகுதிக்கு டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதியும், லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதியும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Comments are closed.