1982ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 9 ந் தேதி. நான் ஹிந்து முன்னணியில் பொறுப்பில் இருந்த நேரம். மதியம் 12.30 மணி அளவிலே வீட்டிலிருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன்.அப்போது நான் வசித்து வந்த வடபழனி பகுதியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.பாலு நாயக்கரின் மகனான திரு.கேசவமணி வந்தார்.” கண்ணன் சார், உங்களத்தான் பார்க்க வந்தேன்” என்றார். “ உள்ளே வாங்க சார்” என்று வரவேற்று விட்டு,” சொல்லுங்க சார்” என்றேன்.

” நம்ம வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 12.56 ஏக்கர் நிலத்தை( சுமார் 226 கிரவுண்டுகள்—முருகன் கோயிலுக்கு வலது புறம்,கோயிலுக்கு பின்னால் சித்தர்கள் சமாதியை சுற்றி,சாலிகிராமம்,கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் என இந்த நிலங்கள் அமைந்திருந்தன) கபளீகரம் செய்ய முயற்சி நடக்குது. மனசு கேக்கல அதான் உங்கள பாத்து சொல்லிட்டு போலாமின்னு வந்தேன்”என்று சொன்னார். யார் முயற்சி செய்யறாங்க” என்று கேட்டேன்.இன்றைக்கு அ.இ.அ.தி.மு.க வில் முக்கிய புள்ளியாக ( அன்றைக்கும் அவர் முக்கிய புள்ளித்தான்) இருக்கும் ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டார்.”என்ன செய்யறாங்க” என்று கேட்டேன்.” ஒரு சொஸைட்டி அமைச்சிருக்காங்க.அந்த சொஸைட்டிக்கு இந்த நிலங்கள விக்கறதாம்.கிரவுண்டு ஒன்றிற்கு 20,000 ரூபாய் விலையாம்,அதுவும் 40 இன்ஸ்டால்மென் டுலே கொடுக்கறதாம்,ஒரு 7 அல்ல்து 8 இன்ஸ்டால்மென் டு கட்டிய பிறகு கோயிலுக்கு பாக்கி பணத்தை கொடுக்காம விட்டுறாதாம்”என்று கூறினார்.

“இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?” என்று அவரை கேட்டேன்.ஹிந்து அறநிலையத்துறை சட்ட பிரகாரம் நிலங்களை விற்பதில் யாருக்காவது ஆட்சேபணை இருக்கான்னு கேட்காணும்.பாருங்க இப்படி ஒரு பத்திரிகை இருக்கான்னு தெரியாத ஒரு பத்திரிகையிலே விளம்பரம் கொடுத்திருக்காங்க,யாரு கண்ணுளையும் பட்டு விடக்கூடாது என்பதற்காக” என்று கூறி ஒரு பத்திரிகையை நீட்டினார்.

”நிலங்களை விற்க ஆட்சேபணை இருக்கன்னு சொன்னா நிறுத்திடலாம்,அவுங்க ஆளுங் கட்சி..அதான் அப்பா உங்ககிட்ட சொல்லச் சொன்னார்”.

“ஆட்சேபணை தெரிவிக்க எப்போ கடைசி நாள்” என்று கேட்டேன்.”இன்னிக்கு மதியம் 2 மணிக்குள்ள தெரிவிக்கணும் “ என்று சொன்னார்.”என்ன சார் இப்படி கடைசி நிமிஷத்திலே வந்து சொல்றிங்க மணி இப்பவே ஒண்ணு ஆக போவுது.டைப் அடிக்கக் கூட நேரம் இல்ல” என்று அவரை கடிந்து கொண்டேன்.”சரி நான் பார்த்து கொள்கிறேன் “ என்று அவரை அனுப்பி விட்டு கிடு கிடுவென கையிலேயே ஒரு கார்பன் பேப்பர் வைத்து ஆட்சேபணை கடிதம் தயார் செய்தேன்.அந்த நேரத்திலே அங்கு வந்த இயக்க சகோதரர் திரு. சண்முகராஜ் அவர்களையும் ஒரு ஆட்சேபணை கடிதம் தயார் செய்ய சொன்னேன்.

ஆட்சேபணை கடிதங்களோடு வெளியே வந்த போது திரு.கேசவமணி மறுபடியும் வந்தார்.” சார் அங்கே H.R.&C.E. ஆபிஸிலே கமிஷனர் P.A. அர்ஜுனன் இருக்காரு.அவர் ரொம்ப நல்லவர்,அவர பாத்து கடிதத்தை கொடுங்க, தபால் sectionலே கொடுக்காதீங்கன்னு “ ஆலோசனை கூறினார்.

ஒரு சைக்கிளிலே doubles ஓட்டிக்கொண்டு நுங்கம்பாக்கத்திலே இருந்த H.R.&C.E. ஆபிஸிக்கு விரைந்தோம்.சரியாக உள்ளே நுழையும் போது மணி 1.40.அர்ஜுனன் சார் அறைக்கு விரைந்தோம்.ப்யூன் அவர் சாப்பிட்டு கொண்டிருப்பதாக சொன்னான்

அவரை ரொம்ப அவசரமாக பார்க்க வேண்டும்,வடபழனி முருகன் கோயில் விஷயமாக ஹிந்து முன்னணியில் இருந்து பார்க்க வந்திருப்பதாக சொல்லச் சொன்னோம்.
ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே அவர் வந்தார்.சாப்பிடுவதை கூட பாதியில் ந்றுத்தி விட்டு வந்திருந்தார்.


அவரிடம் ஆட்சேபணை கடிதங்களை கொடுத்தோம்.” அப்பா முருகன் சொத்துக்களை காப்பாற்ற யாராவது வர மாட்டாங்களான்னு காத்துக்கிட்டிருந்தேன்” என்று சொன்னார்
” நீங்க acknowledgementலே சீல் போட்டு கொடுங்கன்னு கேட்டேன்”.நானே போட்டுத் தரேன்னு சீல் போட்டு அவரே கையெழுத்து போட்டு தந்தார்.


அவரை தயக்கத்துடன் பார்த்தேன்.”நீங்க தைரியமாக போங்க நான் விற்பனையை நிறுத்திட றேன்னு சொன்னார்.அப்பா வேலை முடிந்தது என்ற திருப்தியோடு வீடு திரும்பினேன்.சாப்பிட்டு விட்டு சற்றே ஓய்வு எடுத்து கொண்டிருந்தேன்.ஒரு 3.30 மணி இருக்கும்.தடதடவென வீட்டின் மெயின் கதவை தட்டும் சத்தம்.” யாரு என்று கேட்டுக் கொண்டே நானும் என் அம்மாவும் வெளியே வந்தோம்.பார்த்தால் ஒரு பத்து,பதினைந்து பேர்,இந்த அரசியல் பிரமுகர் தலைமை தாங்க வந்திருந்தனர்.”இங்க யாரு கண்ணன்” என்று உரத்த குரலில் கேட்டனர்.” நான் தான் கண்ணன் என்ன விஷயம்” என்று கேட்டேன்.”நில விற்பனைக்கு ஏன் ஆட்சேபணை கொடுத்தீங்க, நாங்க அண்ணா தி.மு.க. தெரியுமா ?” என்றார்கள்.”நீங்க எந்த தி.மு.க.வா இருந்தாலும் எனக்கென்ன, கோயில் சொத்தை கொள்ளை அடிகிறத அனுமதிக்க முடியாது” என்று சொன்னேன்.எங்கள் குடும்பம் 50 வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியிலே வசித்து வந்த குடும்பம் ஆதலால்,இவர்கள் சத்தம் போட்டு கொண்டிருந்த போதே அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.அவர்களை பார்த்ததும் இவர்கள் அங்கிருந்து போய் விட்டார்கள்.


நான் உடனே திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களை(ஆடிட்டர்,அரசியல் விமர்சகர்) தொலைபேசியில் கூப்பிட்டு பேசினேன்.அவர் சொன்னார்,”கண்ணன் இதில் பெரிய அரசியல் பின்னணி இருக்கின்னு நெனைக்கிறேன்.நீங்கள் தனியா ஹாண்டல் பண்ண வேண்டாம்.ஒரு 5 நிமிஷம் கழிச்சி உங்கள கூப்பிடறேன் “ என்று சொன்னார்.ஐந்து நிமிடம் கழித்து அவரிடமிருந்து போன் வந்தது.” கண்ணன்,நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை நிருபர் RMT.சம்ப்ந்தம் கிட்டே பேசியிரு க்கேன்.அவர் உங்கள கூப்பிடுவார்.இதை பத்திரிகையில் கொண்டு வருவோம்” என்றார்.திரு.குருமூர்த்தி அவர்கள் போனை வைத்த கையோடு சம்பந்தம் அழைத்தார்.வீட்டு விலாசத்தை கேட்டுக் கொண்டு ஒரு அரை மணி நேரத்திற்குள் வீட்டிற்கு வந்தார்.நான் விவரங்களை தெரிவித்தேன்.


”நீங்க சொன்னா மட்டும் போதாது.வேறு யாராவது இதைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும்” என்றார்.நான் கேசவமணி பெயரை சொன்னேன்.ஆனால் நீங்கள் பத்திரிகை நிருபர் என்றால் அவர் பயப்படுவார்.உங்களை மதுரை மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் என்று அறிமுகப் படுத்துகிறேன்” என்று சொன்னேன்.”I am prepared to play any role " என்று சொன்னார்.இருவரும் கேசவமணி வீட்டிற்கு போனோம்.”இவர் மதுரை மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர்.வீட்டிற்கு வந்திருந்தார்.முருகன் கோயில் பிரச்சனையைப் ப்ற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்,அப்படியே உங்களையும் பார்க்கலாமின்னு வந்தேன்”என்ற் சொன்னேன்.” ஆமாம் சார்” என்று ஆரம்பித்தவர் கோயிலில் நடக்கும் அனைத்து பிரச்சனைகள் பற்றியும் பேசித் தள்ளி விட்டார்.

எல்லாம் முடிந்ததும்”நான் பார்த்து கொள்கிறேன்”என்று விடை பெற்றுக் கொண்டு சம்பந்தம் புறப்பட்டு சென்றார்.அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ்,தினமணி பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இந்த செய்தி வெளியானது.Indian Express ,' Temple land Grab political Big wigs behind ' என்று செஉதி வெளியிட்டது.உடனேஉடனே எல்லா எதிர் கட்சிகளும் சட்ட சபையில் இந்த பிரச்சனையை கிளப்பினர்.பொதுக் கூட்டங்களில் பேசினார்கள்.கடைசியில் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நில விறபனை கைவிடப்படுவதாக அறிவித்தார்.காப்பாற்றப்பட்ட நிலங்களின் இன்றைய மதிப்பு சுமார் 500 கோடிக்கு மேலிருக்கும்.ஹிந்து முன்னணிக்கு பகுதி மக்களிடையே நல்ல பெயர் கிடைத்தது அந்த பக்கத்தில் எப்போதாவது போகும் போது ஒரு மன நிறைவு ஏற்படுகிறது !

நன்றி; கண்ணன் சுப்ரமணியன் 

Leave a Reply