ஒரு பெரும் போராட்டம் என்று தொடங்கி பல உயிர்களின் பலியில் முடிந்திருக்கிறது, ஸ்டெரிலைட் எதிர்ப்பு.

போலீஸ் துப்பாக்கி சூடு என்பது, ஏதோ கூட்டத்தை பார்த்தவுடன் முடிவெடுத்து எடுக்கும் நடவடிக்கை அல்ல, வன்முறையின் தாக்கத்தினை அளந்து பார்த்து எடுக்கப்படும் நடவடிக்கை. துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வழங்கும் இயக்க நடைமுறை என்ன என்று உங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் இருக்கும் நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள், தெரியும்.

நடந்த வன்முறைச் செய்ல்களைப் பார்த்தால், இது சாதாரணமாக, ஏதோ வந்த போக்கில் மக்களால் உணர்ச்சி மிகுதியில் நடந்த வகையாகத் தெரியவில்லை. முதலில் சிறு சிறு கூட்டங்களின் வீடியோக்கள், அதில் பெண்கள் முதற்கொண்டு, "போலீஸ் வந்தா ஒரு போலீசுக்கு பத்து பேர் சேர்ந்து அடிப்போம்", என்ற பேச்சுக்கள், போராட்டத்தில் முதலில் போலீசார் துரத்தப்பட்டது, பின் போலீசாரின் போராட்டத் தடுப்பு வாகனம் எரிக்கப்பட்டது, கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது, உடைக்கப்பட்டது, ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பது போன்றவை சாதாரண வன்முறை அல்ல, இது நக்சல்பாரிகளின் வழிமுறை, அவை எப்படி இங்கே வந்தன? இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

தமிழகத்தில் கடந்த ஓரிரு வருடங்களாகவே போராட்டங்கள் அதிகரித்து வந்து, அது ஓரிரு மாதங்களாக வன்முறையில் மட்டுமே முடிகின்றன, இது நல்லதற்கல்ல. இந்த வகை போராட்டத்தைத் தூண்டுபவர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற சிந்தனை வராமல் இல்லை.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுயது, இந்த வகை போராட்டத்தை தூண்டுபவர்கள் தமிழகத்தின்பாலோ, அல்லது இந்திய நாட்டின்பாலோ அக்கறை இல்லாதவர்கள் என்று வரையறுக்க பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மக்களுக்கு விளக்க வேண்டும், புரிய வைக்க வேண்டும்.

ஸ்டெரிலைட் ஆலையை மூட வன்முறை இல்லாத வழியே இல்லையா? ஏன் இந்த போராட்டக்காரர்களின் தலைவர்கள் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு போகவில்லை? நீதிமன்றம் போகலாமே! அங்கே சென்று இந்த ஆலை, இங்கிருப்பது சரியல்ல என்று நிரூபித்தால் அடுத்த வினாடி, நீதிமன்றம் ஆணை வழங்குமே, அதனை இழுத்து மூட! ஏன் அதனை செய்ய மறுக்கிறார்கள்? காரணம், அவர்களிடம் அதற்குண்டான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அவ்வாறன ஆதாரங்கள் இருப்பின், அவ்வாலை மூடப்படுவதில் தவறில்லை.

மக்களிடம் தேவையில்லாமல் உணர்ச்சிகளைத் தூண்டி, அரசு நம்பத் தகுந்தது அல்ல, நீதிமன்றத்தை நம்ப முடியாது, போன்ற நக்சல்பாரிக் கோட்பாடுகளை அவர்கள் மீது திணித்து, கூட்டம் சேர்ந்தவுடன், குழு-மனநிலையைப் பயன்படுத்தி வன்முறையை தூண்டுவதே அவர்களின் நோக்கம் போல் தெரிகிறது.

இதற்கு தேவாலயங்கள் துணை நிற்கின்றன என்பது மேலும் வருத்ததிற்குரிய விஷயம். "வன்முறையை விரும்புகிற எவனையும் தேவன் வெறுக்கிறார்", என்றுதானே சங்கீதம் 11:5 சொல்கிறது? இதனை ஏன் தேவாலயங்கள் அம்மக்களுக்கு போதிக்கவில்லை?

ஆன்மீகவாதிகள் கடவுளுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். கடவுள் மீது அன்பு கொண்டு அவருக்குப் பிடிக்காததை செய்யக் கூடாது என்ற பயம் இருக்க வேண்டும். நாத்திகர்கள், அவர்கள் கற்ற கல்வி வழி நடக்க வேண்டும், தமிழகத்தில் இரண்டும் இல்லையே!

இங்கே சமூக வலைத்தளங்களில் அவ்வன்முறையை ஆதரித்து எழுதியவர்கள் யார்-யார் என்று பார்த்தல், தலை சுற்றுகிறது! அரசுத் துறையல் இருந்த/இருப்பவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நல்ல கல்வி பெற்று மேல்நாட்டில் பணி புரிபவர்கள் என்று பலதரப்பினர்! End of education is character என்பார்களே, அது ஏன் நம் தமிழக மக்களிடம் இல்லை? இவர்களின் வழி செல்லும் இளைஞர்களின் வாழ்வு என்னாவது? அழிவுப் பாதையில் செல்லும் இளைஞர்களை மீட்டுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழகம்! இல்லையெனில், அவர்கள் வாழ்வே இருள் மயமாகி, மேலும் மேலும் இன்னல்களில் அவர்கள் உழல வேண்டி வரும்.

இன்றய தூத்துக்குடியில் நடந்த வன்முறையை உலகம் ஏற்குமா? வந்தவர்களை போராளிகள் என்றோ, புரட்சியாளர்கள் என்றோ உலகம் அங்கீகரிக்குமா? நிச்சயம் ஏற்காது, அங்கீகரிக்காது! இங்கே ஒரு சில மனசாட்சியற்றவர்கள் வேண்டுமானால் புலம்பலாம், நாம் வஞ்சிக்கப்பட்டோம் என்று, ஆனால் உலகின் எந்த ஒரு நாடும் இதற்கு செவி சாய்க்காது. நடந்த வன்முறையின் ஆழம் அப்படி! கட்டுப்பாடுகளற்ற, தான்தோன்றித்தனமான வன்முறையை எதிர்த்தே உலகம் செயற்படும்.

இதில் சிலருக்கு தமிழினம் அழிக்கப் படுகிறது என்கிற கவலை வேறு! தமிழ் நாகரீகம், கலாச்சாரம் இதுதானா? எந்த தமிழ்க் கலாச்சார விழுமியம் கட்டுப்பாடுகளற்ற, தான்தோன்றித்தனமான வன்முறையை ஆதரித்தது? தமிழ் நாகரீகம் என்றால் என்ன என்று அறிந்த எவருமே இந்த வன்முறையை ஆதரிக்க மாட்டார்கள்.

நீ ஏன் வன்முறை பற்றியே பேசுகிறாய்? துப்பாக்கிச் சூடு நியாயமா?" என்று நீங்கள் கேட்கலாம், ஆம், அது அரசின் எதிர்வினை, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவர்களின் கடமை அது. எந்த வன்முறையை எதிர்க்கிறோமோ அதற்குச் சமானமான வன்முறையாளர்களாக நாம் உருவாகிறோம். அவர்கள் செய்ததையே நாம் செய்ய ஆரம்பிக்கிறோம், அது இரண்டுமடங்கு வன்முறையை மட்டுமே உருவாக்கும், அதுதான் இந்த துப்பாக்கிச் சூடு! அரசாங்கங்கள் வன்முறையின் வலிமையில் நிலைநிற்பவை அல்ல, அவை அந்த அரசுகளை ஆதரிக்கும் மக்களால் நிலைநிறுத்தப்படுபவை. அந்த மக்களின் கருத்தியல் நம்பிக்கைகளே அவ்வரசுக்கான ஆதரவாக ஆகின்றன.

வன்முறை குறுகிய கால வெற்றியைத் தரலாம், நீண்ட நாள் நற்பலன்களைத் தராது என்பது உலக வரலாற்றில் மீண்டும்-மீண்டும் நிரூபணமான விஷயம். இன்று நடந்த வன்முறை, பகையால் நடந்த வன்முறையும் அல்ல, போரினால் ஏற்பட்ட வன்முறையும் அல்ல, இறந்தவர்களின் குடும்பம் அனாதை ஆனதே மிச்சம்! இன்றைய வன்முறையாளர்களை பார்த்து, தமிழகமே வெட்கித் தலை குனிய வேண்டி இருக்கிறது.

இனி இது போன்ற வன்முறையை முளையிலேயே கிள்ளி எறிய அரசு சிந்தித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறை வழி செல்ல எத்தனித்திருக்கும் இளைஞர்களை மீட்டெடுக்கும் கடமை அரசிற்கு இருக்கிறது.

அடுத்த தலைமுறை, வன்முறை பற்றி சிந்திக்கவே கூடாது எனில், கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். காந்தியம், பள்ளிக் கல்வியிலேயே சேர்க்கப்பட வேண்டும். வரும் தலைமுறை, வன்முறையை சித்தாந்த ரீதியாக, ஆழமாக எதிர்க்க வேண்டும். நல்ல தலைமுறை தலையெடுக்க வேண்டும். காந்தியத்தை ஏன் சொல்கிறேன் என்றால், அதில் இருக்கும் "வன்முறை தவிர்த்தல்" எனும் கோட்பாடு, வளர் இளம் பருவத்திலேயே அவர்களை நல்வழிப் படுத்தும் என்பதே பல கல்வியாளர்களின் கணிப்பு. வன்முறை ஒருபோதும் ஏற்கத்தக்க வழியாகாது என்றார் காந்தி. அவ்வகைக் கல்வியின் மூலம் அடுத்த தலைமுறையின் மனசாட்சியுடன் பேசுவதும், வன்முறையை முழுமையாக நிராகரிக்க வைப்பதும் மட்டுமே அரசு இனி செய்ய வேண்டியது. முழுமையான வன்முறை தவிர்ப்புதான் காந்திய அரசியலின் வழிமுறை, அதனைக் கற்பிக்க வேண்டும்.

வன்முறை என்பது இரு பக்கமும் கூரான ஆயுதம், எப்போது யாரை அழிக்கும் என்பது தெரியாது, எந்தக் காரியத்தையும் சாதிக்க, நம்மைக் கொன்றோழிக்கின்ற வன்முறை சித்தாந்தத்தை ஒதுக்கி வைத்து, நம் வருங்கால சந்ததிகளைக் காக்க வேண்டும்.

வன்முறைக்கு நிரந்தர தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது. ஆம், மக்களின் மனநிலையும் நடத்தையும் மாறுவதில்தான் இருக்கிறது.

நன்றி; கார்த்திக் சீனிவாசன்

Leave a Reply