ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேர்மையான நிர்வாகத்தின்மூலம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஸ்ரீநகர் வந்தார். ஆளுநர் என்.என்.வோரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் மாநில அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். காஷ்மீர் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து அவர் ஆய்வுநடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது:

வளர்ச்சி அடைந்த மற்றும் செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான் எங்கள் கனவு. மாநிலத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டு விட்டால், அந்தக்கனவு நனவாகும். எனவே, நேர்மையான, திறமையான, செயல்திறனுள்ள சிறந்த நிர்வாகத்தின் மூலம் மாநிலத்தில் அமைதியை கொண்டுவருவதுதான் எங்கள் கனவு.

இதுவரை காஷ்மீரில் வளர்ச்சியும், சிறந்தநிர்வாகமும் நல்ல முறையில் அமையவில்லை. எனவே, தற்போது மாநில நிர்வாகத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கை பிறக்கும் வகையில் அந்தநடவடிக்கைகள் இருக்கும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply