வாக்குவங்கி அரசியலை முதல்வர் சித்தராமையா நடத்துகிறார் என்று பாஜக எம்பி ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை பயங்கரவாத அமைப்புகள் என முதல்வர் சித்தராமையா கூறியிருந்ததை கண்டித்து, பெங்களூரில் மைசூரு சதுக்கத்தில் பாஜக சார்பில் சனிக் கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஷோபா கரந்தலஜே பேசியது:-


இன்னும் சிலமாதங்களே முதல்வராக நீடிப்போம் என்பதை சித்தராமையா அறியவில்லை. அகந்தையின் உச்சத்தில் நின்றுகொண்டு பாஜக, ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்புகள் என்று கூறியிருக்கிறார். முதல்வர் சித்தராமையா வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.


இஸ்லாமியர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைத் தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார். இதற்காக கர்நாடகமக்களிடம் முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், ஹிந்து அமைப்புகளின் தொண்டர்கள் கொலைசெய்யப்படுவது அதிகரித்துள்ளது. கேரளத்தை போலவே கர்நாடகத்திலும் கொலைகள் நடந்துவருகின்றன.


கேரளம், கர்நாடகத்தில் ஹிந்து தொண்டர்கள் கொலை செய்யப்படுவது குறித்து தேசியபுலனாய்வுப் படையினரால் விசாரணை நடத்த வேண்டும். நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கியதற்கு காங்கிரúஸ காரணமாகும் என்றார். எம்எல்ஏக்கள் விஜய குமார், அஸ்வத்நாராயணா, முன்னாள் மேயர் நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாப ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதைத்தொடர்ந்து, சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:

Leave a Reply