பிரதமர் நரேந்திரமோடி இன்று மராட்டிய மாநிலத்தில் அக்லுச் என்ற ஊரில் தேர்தல்பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வாரிசு அரசியல் உள்ளவர்கள் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் இந்தசமுதாயத்தில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள்.
என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரேஇனத்தையே களங்க படுத்துகிறார்கள். அவர்களதுபேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இனியும் நான் பொறுத்து கொள்ளமாட்டேன்.
நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன். அதனால் வாரிசுதாரர்கள் என்னை பார்த்து கேலி செய்கிறார்கள். நான் காவலாளி என்றால் திருடன் என்கிறார்கள்.
உண்மையில் இந்தநாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது.
இந்ததொகுதியில் முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போட்டியிட்டார். இந்த தடவை அவர் இங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
நீங்கள் இங்கு கடல்போல் திரண்டு இருக்கிறீர்கள். எங்குபார்த்தாலும் காவிகொடி பறக்கிறது. சரத்பவார் ஏன் இங்கிருந்து ஓடினார் என்பது உங்களை பார்த்த பிறகுதான் தெரிகிறது.
நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டை வழி நடத்த வேண்டும் என்றால் வலிமையான தலைவர் வேண்டும்.
மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால்தான் வலிமையான தலைமை கிடைக்கும். வாரிசுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
இவ்வாறு மோடி பேசினார்.