கடன் பிரச்சினையில் சிக்கிதவிக்கும் விஜய் மல்லையாவின், கிங் பிஷர்  ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  குறித்து பேசிய மத்தியநிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியாவில் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நல்ல வருவாய் ஈட்டும் நிலையில், விஜய்மலலையாவின் வணிக மாதிரி தவறாக இருக்க கூடும்  என்று தெரிவித்துள்ளார்.
 
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத் துறை வங்கிகள் உள்பட 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 2–ந்தேதி அவர் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.
 
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கதுறையும் விஜய் மல்லையாவின் இந்த மோசடிகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு, மும்பையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 3 முறை அவருக்கு அமலாக்கத் துறை சம்மனும் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.  இதை யடுத்து, விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் 4 வாரங்களுக்கு முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம்  விஜய் மல்லையா பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அபோது, கேள்விக்கு நேரிடையாக பதிலளிக்காமல் ஜெட்லி கூறுகையில், “ இந்தவிவகாரத்தில் நான் இறுதி கருத்தை சொல்லமாட்டேன். இது குறிப்பிட்ட நிறுவனத்தின் வணிக மாதிரியை சார்ந்ததாக இருக்க கூடும். விஜய் மல்லையாவிடம் இருந்து பணத்தை திரும்பபெறுவதை பொருத்தவரை, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கிகள் எடுத்துவருகின்றன. இதில், சட்ட விதி மீறல்கள் இருந்தால் விசாரணை முகமைகள்  நடவடிக்கை எடுக்கும்” என்றார். 

Tags:

Leave a Reply