சாலை விபத்தில் சிக்குகிறவர்களை காப்பாற்றப் போய் பலரும் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியது வருகிறது. நீதிமன்றம், காவல் துறை என பல நடவடிக்கைகளையும், தொல்லை களையும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனால் சிலர் சாலைவிபத்துகள் நடக்கிறபோது, கண்டு கொள்ளாமல் போய்விடுவதும் உண்டு. அப்போது உயிரிழப்புகள் நேருவதையும் காணமுடியும்.
 
இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து வழிமுறைகளை வகுத்துதருவதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 உறுப்பினர்குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு தனது பரிந்துரைகளை அளித்தது.

 

 

அவற்றில், சாலைவிபத்தில் சிக்குவோரை காப்பாற்றுகிறவர்கள் எந்த அல்லலிலும், தொல்லையிலும் அகப்படாமல் தங்களை காத்து கொள்வதற்கு ஏற்றவழிமுறைகள் இடம் பெற்றுள்ளன.மதுபானம் அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டி, சாலை விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு எதிராக சட்டத்தின்பிடி இறுகுவதற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில்கள் நிறுவவும் சிபாரிசு செய்யப் பட்டுள்ளது. 
 
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை துறை அமைச்சகம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அந்த வழிமுறைகள் உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை நீதிபதிகள் வி.கோபால கவுடா, அருண்மிஷ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு  பரிசீலித்து கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளவும், சாலை விபத்தில் சிக்குகிறவர்களை காப்பாற்றும் வகையில் விரிவான விளம்பரம் தருமாறு மத்தியரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து இதற்கான அரசாணையை மத்திய அரசு இன்று வெளியிட்டது. சாலை விபத்துக்களில்போது  உதவி செய்பவர்களின் பெயர் முகவரியை கேட்டு கட்டாயப்படுத்த கூடாது. உதவி செய்பவர்களை சாதி மதம் கடந்து உரிய மரியாதையுடன் நடத்தவேண்டும். என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி சாலை விபத்துகளில் சிக்குவோரை தயக்கமின்றி பொதுமக்கள் காப்பாற்றுவதற்கு வழிபிறக்கும்.

Leave a Reply