மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தொழி லதிபர் சுஷீல் குப்தாவை போட்டியிட தேர்ந்தெடுத்தி ருப்பதன் மூலம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பணத்துக்கு விலை போய் விட்டார். சுஷில் குப்தாவை மாநிலங்களை வேட்பாளராக அறிவிக்க எத்தனைகோடி கைமாறப்பட்டுள்ளது என்பதை கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும்' என்று பாஜக.,வின் தில்லி  தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.  


இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஊழலை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதிகொடுத்து ஆட்சிக்குவந்த கேஜரிவால், ஊழலுக்கு அடிமையாகிவிட்டார். அரசு மருத்துவ மனைகளின் தரம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்துவரும் வேளையில், தனியார் மருத்துவ மனையொன்றின் நிறுவனரான சுஷீல் குப்தாவை, மாநிலங்களவை வேட்பாளராக கேஜரிவால் அறிவித்து மக்களுக்கு துரோகம்செய்துள்ளார்.


  தில்லி அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.  758- ஆக இருந்த ஜி.பி.பந்த் மருத்துவமனையின் படுக்கைகளின்  எண்ணிக்கை, தற்போது 735 ஆக குறைந்துள்ளது. 


ஜனக்புரி சிறப்பு மருத்துவமனையில் 250 படுக்கைவசதிகள் உள்ளது. ஆனால்,  100 படுக்கைகளே நோயாளிகளின் பயன்பாட்டிற்கு உள்ளன. இந்நிலையில், தனியார் மருத்துவமனை நிறுவனரை வேட்பாளராக நியமித்ததன் பின்னணியில் பெரும்ஊழல் நடைபெற்றுள்ளது.  சுஷீல்குப்தாவை  நியமித்ததில் கைமாறியுள்ள தொகை தொடர்பாக கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்  அவர்.

Leave a Reply