நாடுமுழுவதும் உள்ள விளை நிலங்களின் பரப்பளவு, ஒவ்வொரு ஆண்டும், 30,000 ஹெக்டேர் அளவுக்கு குறைந்துவருவதாக, மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது, மத்திய வேளாண்மை துறை இணை அமைச்சர் சஞ்சிவ்பாலியன் இதுகுறித்து கூறியதாவது:

நாட்டில் உள்ள ஒட்டு மொத்த விளை நிலங்களின் அளவு, ஆண்டுக்கு 30,000 ஹெக்டேர் என்ற அளவுக்கு குறைந்துவருகிறது. எனினும், ஒட்டுமொத்த விவசாய உற்பத்தித்திறன் மெல்ல அதிகரித்துவருவதால், அச்சப்படும் சூழல் இல்லை.

பயிர்செய்யத்தக்க விளை நிலங்களின் அளவு குறைந்தாலும், விளைச்சலில் பெரியளவுக்கு பாதிப்பில்லை. பாசன வசதிகளை மேம்படுத்துவது, பயிர்அடர்த்தியை 138-ல் இருந்து 200 சதவீதம் அதிகரிப்பதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிப்பை தவிர்க்கமுடியும்.

விதைகளின் தரம், நீர்ப்பாசன வசதிகள், வேளாண் தொழில் நுட்பங்களை முறைப்படி பயன் படுத்துவது போன்றவை தொடர்ந்து நமக்கு சவாலாகவே உள்ளன. நாடுமுழுவதும், 45 சதவீத நிலம்மட்டுமே பாசனவசதி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 32.8 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில், 18.19 கோடி ஹெக்டேர் மட்டுமே விளைநிலமாகும். 2.6 ஹெக்டேர் அளவிலான நிலத்தில் பாசனவசதியை மேம்படுத்தி விளைச்சல்பெற முடியும். தற்போது, 1.52 ஹெக்டேர் தரிசு நிலமாகவும், 1.1 கோடி ஹெக்டேர் கடந்த 5 ஆண்டுகளாக விளைச்சல் இல்லாமலும் உள்ளன.

இவ்வாறு அமைச்சர் சஞ்சிவ் தெரிவித்தார்.

Leave a Reply