தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெறுவதற்காக குழந்தைகளுக்கு பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பொதுத்தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு நிலவும் அச்சத்தை போக்கும்வகையில், ”தேர்வுக்கு பயம் ஏன்?” என்ற நிகழ்ச்சி டெல்லி தல்கோத்தரா உள் விளையாட்டரங்கில் நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரை யாடினார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் ஆயிரத்து 50 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியின் உரை நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பார்க்கும்விதமாக ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களின் கற்பனையால் நாடு வளம் ஆகவேண்டும் என்றும், நமது கற்பனையில் மாற்றம் உருவாகவேண்டும் எனவும் கூறினார். வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை வருவது சகஜம் தான் என குறிப்பிட்ட மோடி, எல்லோரும் அந்த சூழலை சந்தித்திருப்போம் எனவும் தெரிவித்தார். சந்திரயான் -2 விண்கலத்தை சுட்டிக்காட்டி பேசிய மோடி, சந்திரயான் -2 தோல்வி அடைந்தபோது நாடே சோகத்தில் இருந்தது என்றும், ஏவுகணை விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு செல்லவேண்டாம் என சிலர் தம்மிடம் கூறியதாக தெரிவித்தார். எனினும் தாம் அங்கு சென்றதாகவும், சந்திரயான் முழு வெற்றி அடையாவிட்டாலும் விஞ்ஞானிகளின் முயற்சியை தாம் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தேர்வில் அதிகமதிப்பெண்கள் வாங்க வேண்டும் குழந்தைகளுக்கு பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது என வலியுறுத்தியவர், வெற்றியை மதிப்பெண்கள் தீர்மானிக்காது எனவும் கூறினார். உலகம் முழுவதும் வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும் மோடி தெரிவித்தார். 2001ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி பின்னடைவை சந்தித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ராகுல் ட்ராவிட்டும், விவிஎஸ் லட்சுமணனும் அணியை சரிவில் இருந்துமீட்டதை நினைவுகூர்ந்தார். அதுவே நேர்மறை எண்ணங்களின் சக்தி எனவும் குறிப்பிட்டார். தொழில் நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்றும், தொழில்நுட்பங்கள் நம்மை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும் பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.

Comments are closed.