வெளிநாடுகளில் லட்சக் கணக்கான இந்தியர்கள் தொழில் நிமித்தமாக வாழ்ந்து வரும் போதிலும் இந்தியாவில் சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என எதுவாக இருந்தாலும் அவர்களில் வெறும் 10,000 முதல் 12,000 வரையிலான இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்துவந்து வாக்களிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மற்றவர்கள் பணிகாரணமாகவும், விடுப்பு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக இங்கு வந்து வாக்களிப்பது என்பது இயலாதகாரியமாக உள்ளது. 

 

எனவே அவர்கள் தபால்மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ வாக்களிப்பது, இல்லையெனில் அவர்கள் சார்பில் அங்கீகாரம் பெற்ற வெறுஒருவர் வாக்களிப்பது என்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர 2015-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் சட்ட முன்வரைவை மத்திய சட்ட அமைச்சத்துக்கு அனுப்பியது. 

 

எனினும் இந்தவிவகாரம் குறித்து கடந்த ஜனவரியில் நடைபெற்ற மத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் எந்தமுடிவும் எடுக்கப் படாமல் ஒத்திவைக்கப் பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் வி.பி.ஷம்ஷீர் என்பவரும் லண்டனில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவர் நாகேந்தர் சிந்தம் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் தனித்தனியாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். 

 

அதில், பொதுத் தேர்தலின்போது, என்.ஆர்.ஐ. க்கள் இந்தியதூதரகம் மூலமோ, அஞ்சல் மூலமோ, இணையதளம் வழியாகவோ தங்கள் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தமனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்தியதேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதில் தேர்தல் ஆணையம் நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. 

 

இந்தவழக்குகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசுசார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உலகம் முழுவதும் உள்ள 2.5 கோடிக்கும் அதிகமான வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம்கொண்டு வரப்படும். இதற்காக நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தில் மசோதா தாக்கல்செய்யப்படும்”, என்றார். 

 

வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு 12 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply