பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 4 ஆண்டுகள் 7 மாதங்களாக அதிகாரத்தில் உள்ளார். தற்போது இன்னொரு மைல் கல்லையும் நெருங்கி வருகிறார்.

அடுத்த சில மாதங்களில், பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்குள் இன்னும் இரண்டு நாடுகளுக்கு சென்றால் அதிக வெளிநாடு பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியபிரதமராக இருப்பார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 113 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்து உள்ளார். இதுவரை பிரதமர் மோடி 92 நாடுளுக்கு பயணம் செய்து உள்ளார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 93 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

மோடி 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 92 நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார். மன்மோகன் சிங் தனது 2 ஆட்சி காலங்களில் (10 ஆண்டுகளில்) 93 நாடுகள் பயணம் செய்து உள்ளார். இந்திராகாந்தி தனது 3 ஆட்சிகாலங்களில் (15 ஆண்டுகள் ) 113 நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார்.

மோடியின் இந்த 92 நாடுகள் பயணத்திற்கு சுமார் ரூ.2021 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இதனை ஒப்பிடும்போது மோடி தனது 5 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் பயணம் செய்து உள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங்கின் 50 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.1350 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.

2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்கும்போது, இந்திய பிரதமர்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றிய விவரங்களை வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம், பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சென்றார். அதற்கான செலவு எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மோடி பிரதமர் ஆனதிலிருந்து 55 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் இதில் சிலநாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சென்றுள்ளதாகவும் கூறினார். நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ரூ.2,021 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் அதிக முதலீடுசெய்த முதல் 10 நாடுகளுக்கும் பிரதமர் மோடி சென்றிருந்ததாகவும், மோடியின் வெளிநாட்டு பயணங்களால் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் 13 ஆயிரத்து 607 கோடி டாலர்கள் அன்னிய நேரடி  முதலீடாக வந்துள்ளதாகவும், ஆனால் இது மன்மோகன்சிங் பிரதமராக இருந்த 2011 முதல் 2014 கால கட்டத்தில் 8 ஆயிரத்து 184 கோடி டாலராக மட்டுமே இருந்தது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

92 நாட்டு பயணங்களுக்கு மோடி 2,021 கோடி ரூபாய் செலவிட்டால், ஒருநாட்டிற்கான சராசரியான செலவு 22 கோடி ரூபாய்.

50 நாடுகளுக்கு மன்மோகன் சிங்கின் பயணத்திற்கான செலவு ரூ. 1,350 கோடி செலவாகும். இது ஒருநாட்டிற்கான சராசரியான செலவு 27 கோடி ரூபாய் ஆகும்.

ஒவ்வொரு பயணத்திலும் பிரதமர் மோடியின் பயண நாட்களின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் செலவைகுறைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபாவில் அமைச்சர் வழங்கிய தகவலின்படி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மோடி 9 நாள் பயணத்தின்போது (ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 17, 2015) ரூ. 31.25 கோடி தனி விமானத்திற்கு அதிக செலவாக இருந்தது.

2014-15 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு பயணங்களுக்கான விமான சேவைகளுக்கான செலவுகள் ரூ. 93.76 கோடி, 2015-16-ல் இது ரூ. 117.89 கோடி. 2016-17 ஆம் ஆண்டில், செலவு ரூ. 76.27 கோடி மற்றும் 2017-18-ல் செலவினம் ரூ. 99.32 கோடி.

மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளுக்கு (நவம்பர் 11 முதல் நவம்பர் 20, 2014) வரையிலான தனி விமான செலவு ரூ.22.58 கோடியாக இருந்தது.

வெளிநாட்டு வருகைகள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றால் செய்யப் படுகின்றன,அவைமிகவும் அழுத்தம் தரக்கூடியவை. மோடி, 480 சிறப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் 2015-16 ஒருவருட காலத்திற்குள், அவர் 24 நாடுகளுக்கு விஜயம் செய்தபோது பரபரப்பாக இருந்தது. இந்த ஆண்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மோடி பயணம் செய்தார்.

55 மாதங்களில் மோடியின் பயணங்கள் , இராஜதந்திர கொள்கைகளின் சுவாரஸ்யமான கலவையை சித்தரிக்கின்றன.

பிரதமர் மோடி 4 நாடுகளுக்கு ஒரு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கிலாந்து, அமீரகம், தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்பட 10 நாடுகளுக்கு 2 முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு மூன்று முறை பயணம் செய்து உள்ளார். ஜெர்மனி, நேபாளம், ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 4 முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு 5 முறை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

1947 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேரு, 68 நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார். 1949 அக்டோபர் 11 முதல் 15 வரை வரையான முதல் வெளிநாட்டு பயணமாக நேரு ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று இருந்தார்.

அவரது மகள், இந்திரா காந்தி, 15 ஆண்டுகளுக்கு பிரதமராக நீடித்த மூன்று கால கட்டங்களில் 115 நாடுகளுக்கு பயணம் செய்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து பின்னர் பிரதமரான ஒரே தலைவர் வாஜ்பாய் அவரதுகாலங்களில் அவர் 48 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். வாஜ்பாய் 1977-ல் ஐ.நா. பொதுச் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் இந்திய வெளியுறவு மந்திரி என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இந்தியாவின் 5-வது பிரதமராக இருந்த சவுத்திரி சரண்சிங் (ஜூலை 28 1979 முதல் ஜனவரி 14 1980 ) இவர் ஒருவர்மட்டுமே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாத பிரதமர் ஆவார்.

Leave a Reply