குஜராத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியுடன் அண்மையில் நான் சென்றிருந்தேன். அப்போது நதிகள் இணைப்பு திட்டம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அவர் அந்தத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார். அந்தத் திட்டத்தை செயல்படுத்த நமக்கு மிகப் பெரிய முதலீடுகள் தேவைப் படுகிறது. அதனால், அந்தத் திட்டத்துக்காக மிகப்பெரிய நிதித் தொகுப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு ஆய்வு செய்துவருகிறது.


மத்திய அமைச்சரவையில் இதுதொடர்பான திட்டத்தை எனது அமைச்சகம் சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள 285 நீர்ப் பாசனத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்தத்திட்டத்தால், 1.88 கோடி ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும். இது தவிர, 27 நீர்ப்பாசனத் திட்டங்கள், இந்த ஆண்டின் இறுதியில் செயல்படுத்தி முடிக்கப்படவுள்ளன.


சொட்டுநீர் பாசனம், குழாய் மூலம் நீர்ப்பாசனம் ஆகியவைக்கே அரசு அதிக முன்னுரிமை கொடுத்துவருகிறது. இதனால்தான், தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், நிலம் கையகப்படுத்த செலவிடப்படும் தொகையும் மிச்சப்படும். குழாய் மூலம் பாசனத்துக்கு நீர் கொண்டு செல்வதால், நிலத்தை கையகப்படுத்தி கால்வாய்கள் அமைக்கச் செலவிடப்படும் தொகையில் ரூ.5 ஆயிரம் கோடியை சேமிக்க முடியும்.


வெள்ளம், வறட்சியை சமாளிப்பதற்கு, நதிகள் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். மத்திய அரசு தற்போது நதிகள் இணைப்பு தொடர்பான 30 திட்டங்களுக்கு ஒப்புதலை அளித்துள்ளது. அதில் 3 திட்டங்கள், விரைவில் தொடங்கவுள்ளது.


கழிவு நீரை வேறுவழியில் உபயோகிப்பதற்கான புதியவழிகளை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. 
என்டிபிசி மின் நிலையங்களுக்கு கழிவு நீரை பயன் படுத்த முடியுமா? என்பதை ஆராயும்படி, மத்திய மின்சாரத் துறை அமைச்சருக்கு நான்கோரிக்கை விடுத்துள்ளேன்.

மத்திய நீர் வளங்கள், நதி நீர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'இந்தியா தண்ணீர் வாரம்-2017' எனும் நிகழ்ச்சியில், பேசியது:

Leave a Reply