எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். பருவநிலை மாறி வருகிறது. இந்த முறை வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால் நல்லகாலம், மழைக்காலம் தக்க தருணத்திலேயே வந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் வருகை, பருவநிலையை இனிமையானதாக ஆக்கியிருக்கிறது. மழைக்குப் பிறகு குளிர்ந்த காற்று, கடந்த நாட்களில் கோடை வெப்பத்திலிருந்து சற்று ஆசுவாசம் அளித்திருக்கிறது. வாழ்க்கையில் எத்தனைதான் இடர்கள் எதிர்ப்பட்டாலும், எத்தனைதான் நெருக்கடி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், பொதுவாழ்வில், மழையின் வருகை, நம் அனைவரின் மனோநிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதை நம்மால் உணர முடிகிறது.

இன்று பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரையை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த முனைப்போடும், மகிழ்வோடும் கொண்டாடி வருகிறார்கள். உலகின் பல பாகங்களிலும் கூட, பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரை கோலாகலமாக நடைபெறுகிறது. பகவான் ஜகன்நாதருடன் நாட்டின் ஏழை ஆன்மபூர்வமாக இணைந்திருக்கிறான். டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர் பகவான் ஜகன்நாதரின் கோயில் மற்றும் அதன் பாரம்பரியத்தை மிக உயர்வாகப் போற்றுவதுண்டு என்பதை பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்; ஏனென்றால், இதில் சமூகநீதி, சமூக சமத்துவம் ஆகியன பொதிந்திருக்கின்றன. பகவான் ஜகன்நாதர் ஏழைகளின் தெய்வம். ஆங்கிலத்தில் ஜக்கர்நவுட் ( juggernaut என்ற ஒரு சொல் இருக்கிறது, யாராலும் தடுக்க முடியாத சிறப்பான ரதம் என்பது தான் அதன் பொருள். அகராதியில் பார்க்கும் போது தான், இந்த ஜகர்நவுட் என்ற சொல், ஜகன்நாதரின் ரதயாத்திரையை ஒட்டியே உருவாகியிருக்கிறது என்பது தெரிய வந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, உலகத்தோர் எப்படி எல்லாம் தங்களுக்கே உரிய வழிகளில் இந்த மஹாத்மியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பகவான் ஜகன்நாதரின் யாத்திரை வேளையில் நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், பகவான் ஜகன்நாதரின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாரத தேசத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சிறப்பு, பாரதத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சக்தி. புனிதமான ரமலான் மாதத்தில் அனைவரும் தூய பிரார்த்தனைகள் செய்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். இப்போது ஈகை பண்டிகை வந்திருக்கிறது. ரமலான் பண்டிகை வேளையில் நான் அனைவருக்கும் ஈகை திருநாளுக்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதம் புனிதமான ஈகை அளிக்கப்பட வேண்டிய மாதம், சந்தோஷங்களை பகிர்ந்துவக்கும் மாதம், எத்தனை சந்தோஷங்களை நாம் பகிர்ந்தளிக்கிறோமோ, அந்த அளவு சந்தோஷங்கள் நிறையும். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து இந்த புனிதமான பண்டிகளிலிருந்து உத்வேகம் பெற்று சந்தோஷங்களின் கஜானாவை பகிர்ந்தளித்துச் செல்வோம், நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்.

     ரமலானின் இந்த புனித மாதத்தில் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்நோரின் முபாரக்பூர் கிராமத்தைச் சார்ந்த ஒரு மிகக் கருத்தூக்கம் அளிக்கும் நிகழ்வு நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. அங்கே சுமார் 3500 இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தங்கள் குடும்பத்தோடு இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்கள், ஒரு வகையில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியக் குடும்பங்களின் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இந்த ரமலான் மாதம், கிராமவாசிகள் அனைவருமாக இணைந்து கழிப்பறை கட்டுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டார்கள். இந்த தனிப்பட்ட கழிப்பறைகளைக் கட்ட, அரசு தரப்பிலிருந்து உதவிகள் கிடைக்கின்றன, இதன் வாயிலாக சுமார் 17 லட்சம் ரூபாய் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. நான் இனி கூறவிருக்கும் இந்தச் செய்தி உங்களுக்கு சுகமான ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், ஆனந்தம் அளிக்கலாம். ரமலானின் இந்த புனிதமான மாதத்தில், நமது அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட 17 லட்சம் தொகையை அரசுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இது மட்டுமல்ல, நாங்கள் எங்கள் கழிப்பறைகளை, எங்கள் உழைப்பில், எங்கள் பணத்தில் அமைத்துக் கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆகையால் தாங்கள் இந்த 17 லட்சம் ரூபாயை கிராமத்தின் வேறு வசதிகளுக்காக செலவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். நான் முபாரக்பூரைச் சேர்ந்த அனைத்து கிராமவாசிகளுக்கும் ரமலானின் இந்த புனித வேளையை, சமுதாய நலனுக்காக மாற்றியமைத்ததற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒவ்வொரு விஷயமும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் முபாரக்பூரை திறந்தவெளிக் கழிப்பறை இல்லாத கிரமமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது தான். நம் நாட்டில் சிக்கிம், இமாசலப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவைகளாக அறிவித்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்த வாரம் உத்தராக்கண்டும் அரியானாவும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நான் இந்த 5 மாநிலங்களின் நிர்வாகத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் சிறப்பான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

தனி வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி, ஏதோ சில நல்லவைகளையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நாம் நன்கறிவோம். நமது கையெழுத்து மோசமாக இருக்கிறது என்றால், அதை சரி செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், நிறைய நேரம் மிக விழிப்போடு இருந்து அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒரு பழக்கமாக மாறும். இதே போல வேறு சில மோசமான பழக்கங்கள் நமது இயல்பாகவே ஆகி இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இடைவிடாத முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். ஒவ்வொருவரின் கவனத்தையும் நாம் ஈர்த்தாக வேண்டும். உத்வேகம் அளிக்கக் கூடிய நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாக வேண்டும்.

தூய்மை என்பது இன்று அரசு மட்டத்தோடு நின்று போகவில்லை என்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. இது மக்கள் சமுதாயத்தின் ஒரு இயக்கமாக பரிமளித்திருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் இருப்போரும், இப்படிப்பட்ட மக்கள் பங்களிப்புத் துணையோடு முன்னேகிச் செல்லும் போது, சிந்தித்துப் பாருங்கள், எத்தனை சக்தி வெளிப்படும், எத்தனை சக்தி அதிகப்படும்!!

     கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடந்த மிகச் சிறப்பான ஒரு சம்பவம் என் கவனத்தில் வந்தது, இதை நான் கண்டிப்பாக உங்களிடம் தெரிவித்தே ஆக வேண்டும். இது ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நடந்த ஒன்று. அங்கே இருக்கும் நிர்வாகம் மக்களின் பங்களிப்போடு ஒரு மிகப்பெரிய செயலில் இறங்கினார்கள். மார்ச் மாதம் 10ஆம் தேதி காலை 6 மணி முதல் மார்ச் மாதம் 14ஆம் தேதி காலை 10 மணி வரை, 100 மணி நேர இடைவிடாத இயக்கம். இதன் இலக்கு என்ன? 100 மணி நேரத்தில் 71 கிராம பஞ்சாயத்துக்களில் 10000 வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது தான். எனதருமை நாட்டு மக்களே, பொதுமக்களும் அரசும் இணைந்து, 100 மணி நேரத்தில் 10000 கழிப்பறைகள் கட்டும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். 71 கிராமங்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறன. நான் ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், விஜயநகர மாவட்டத்தின் அனைத்து கிராமவாசிகளுக்கும் ஏராளமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் உழைப்பால், மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறீர்கள்.

இப்போதெல்லாம் மனதின் குரலுக்கு பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. நரேந்திர மோடி செயலியில் வருகின்றன, மைகவ்.இன்னில்(MyGov.in) வருகின்றன, கடிதங்கள் வாயிலாகவும், ஆகாசவாணி மூலமாகவும் வருகின்றன.

பிரகாஷ் திரிபாடி அவர்கள், அவசரநிலையை நினைவுகூர்ந்து, ஜூன் மாதம் 25ஆம் தேதி மக்களாட்சியின் வரலாற்றிலேயே மிகப்பெரியதொரு கறை என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரகாஷ் திரிபாதி அவர்களுக்கு மக்களாட்சி மீது இருக்கும் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது, மக்களாட்சி முறை என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, இது ஒரு கலாச்சாரம். Eternal Vigilance is the Price of Liberty. அதாவது நிரந்தரமாக விழிப்போடு இருப்பது தான், சுதந்திரத்துக்கு நாம் அளிக்கும் விலை என்பது இதன் பொருள். ஆகையால் மக்களாட்சி முறைக்குத் தீங்கு ஏற்படுத்தும் விஷயங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருப்பது அவசியம்; அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் நல்ல விஷயங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி, அது ஒரு கருமையான இரவு, இதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. எந்த ஒரு இந்தியனும் இதை புறந்தள்ளிவிட முடியாது. ஒருவகையில் இது ஒட்டுமொத்த நாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றியமைத்தது. மாற்றுக் கருத்துக்கள் மண்ணோடு மண்ணாக நசுக்கப்பட்டன. ஜெய்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட, நாட்டின் மாபெரும் தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். நீதியமைப்பும் கூட இந்த அவசரநிலையின் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளானது. செய்தித்தாள்கள் எல்லாம் முழுமையாக செயலிழந்து போயின. இன்றைய ஊடக உலகின் மாணவர்கள், மக்களாட்சி முறையில் பணியாற்றுவோர் எல்லாம், அந்த கறைபடிந்த காலகட்டத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊட்டும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அப்படி ஈடுபட்டும் வர வேண்டும். அந்த காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களும் சிறைச்சாலையில் இருந்தார். நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், அடல் அவர்கள் கவிதை ஒன்றை எழுதினார், அந்தக் கவிதையில் அந்த காலகட்டத்தில் நாட்டில் நிலவிய சூழலை வர்ணித்து எழுதியிருந்தார்.

தகிக்கும் கோடைக்கால வெப்பம்

குளிர்கால நிலவின் சோகம்

தகிக்கும் கோடைக்கால வெப்பம்

குளிர்கால நிலவின் சோகம்

கேவல்கள்நிறை மாரிக்காலம்

சுமையை இறக்கியது எங்கும்

ஓராண்டு கடந்து சென்றது,

ஓராண்டு கடந்து சென்றது.

 

கோரப் பிடியில் உலகு தவிக்குது

உயிர் என்ற பறவை பரிதவிக்குது

கோரப் பிடியில் உலகு தவிக்குது

உயிர் என்ற பறவை பரிதவிக்குது

வானம் முதல் பூமி வரை,

வானம் முதல் பூமி வரை,

விடுதலைகீதம் எங்கும் ஒலிக்குது,

ஓராண்டு கடந்து சென்றது,

ஓராண்டு கடந்து சென்றது.

 

வழிமேல் எங்கும் விழி இருக்குது,

நாட்களை மனம் எண்ணி உருகுது,

வழிமேல் எங்கும் விழி இருக்குது,

நாட்களை மனம் எண்ணி உருகுது,

மறைந்து போனது, திரும்ப வருமோ,

மறைந்து போனது, திரும்ப வருமோ,

மனதின் நேசம் மீண்டும் வருமோ,

ஓராண்டு கடந்து சென்றது.

 

மக்களாட்சியை விரும்புவோர் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டார்கள், பாரதம் போன்ற பரந்துபட்ட தேசத்தில், மக்களின் நாடிநரம்புகளில் எல்லாம் எந்த அளவுக்கு மக்களாட்சி முறை என்பது பரவியிருக்கிறது என்பதை, வாய்ப்பு கிடைத்த போது, தேர்தல் வாயிலாக அந்தச் சக்தியை வெளிப்படுத்தினார்கள். மக்களின் உதிரத்தில் கலந்த மக்களாட்சி முறை என்ற உணர்வு தான் நமது நிரந்தரமான பாரம்பரியம். இந்தப் பாரம்பரியத்தை நாம் மேலும் உறுதிபடைத்ததாக ஆக்க வேண்டும்.

    

எனதருமை நாட்டுமக்களே, இன்று ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்த்தி பெரும் கௌரவத்தை உணர்கிறான். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி, ஒட்டுமொத்த உலகும் யோகமயமானது. நீர் முதல் மலை வரை உள்ள மக்கள் அனைவரும், அதிகாலை சூரியக் கதிர்களை, யோகக்கலை வாயிலாக வரவேற்றார்கள். எந்த இந்தியனுக்குத் தான் இது பெருமை அளிக்காத விஷயமாக இருக்க முடியும் சொல்லுங்கள்!! யோகம் என்பது முன்பு இருந்ததில்லை என்பதல்ல, ஆனால் இன்று யோகக்கலை என்ற இழையில் அனைவரும் இணைந்தார்கள், யோகம் உலகை இணைக்கும் ஒரு பாலமாக ஆனது. உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த யோகக்கலை அளிக்கும் வாய்ப்பை தங்களுக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்கள்.

சீனப்பெருஞ்சுவற்றின் மீதும், பெரு நாட்டின் உலக பாரம்பரியச் சின்னமான மாச்சூ பிச்சூவில், கடல்மட்டத்திலிருந்து 2400 மீட்டர் உயரத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபுதாபியில் 4000த்திற்கும் மேற்பட்டவர்களும் யோகப்பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள்.  ஆஃப்கனிஸ்தானின் ஹேராத்தில் இந்தியா ஆஃப்கன் நட்பணையான, சல்மா அணையில் யோகத்தில் ஈடுபட்டு, நட்புக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்தார்கள். சிங்கப்பூர் போன்ற சிறிய இடத்திலும் கூட 70 இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, ஒருவாரக்காலம் முழுக்க அவர்கள் இந்த இயக்கத்தை மேற்கொண்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச யோக தினத்தை ஒட்டி, 10 தபால்தலைகளை வெளியிட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் yoga session with yoga masters, யோக வல்லுனர்களுடன் யோகம் பயில்வோம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிவோர், ஐ.நாவின் அனைத்து நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

இந்த முறை மீண்டும் யோகம் உலக சாதனை படைத்திருக்கிறது. குஜராத்தின் அஹ்மதாபாத்தில் சுமார் 55 ஆயிரம் பேர்கள் இணைந்து யோகம் செய்து, ஒரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்கள். எனக்கும் லக்னவில் யோகக்கலை பயிலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன்முறையாக கொட்டும் மழையில் யோகம் பயிலும் ஒரு நல்வாய்ப்பாக இது அமைந்தது. மைனஸ் 20, 25, 40 டிகிரிகள் வெப்பநிலை உள்ள சியாச்செனிலும் கூட நமது படையினர் யோகக் கலையில் ஈடுபட்டார்கள். நமது இராணுவம், எல்லையோரப் பாதுகாப்புப் படையினர், இந்திய திபேத்திய எல்லையோரக் காவல் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் என அனைவரும் தங்கள் கடமைகளை ஆற்றுவதோடு, யோகப் பயிற்சியிலும் ஈடுபட்டார்கள். இது 3வது சர்வதேச யோக தினமாக இருப்பதால் 3 தலைமுறைகளைச் சேர்ந்த குடும்பத்தார் யோகம் பயில்வதைப் படம் பிடித்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

சில தொலைக்காட்சி சேனல்களும் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். எனக்கு நிறைய பேர்கள் புகைப்படங்களை அனுப்பி இருந்தார்கள், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில நரேந்திர மோடி செயலியில் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் யோகக்கலை பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவரும் வேளையில், ஆரோக்கியம் பற்றிய விழிப்புடைய சமுதாயமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நாம் உடலுறுதி என்ற நிலையிலிருந்து, உடல்நலம் என்ற திசையை நோக்கிப் பயணிக்கிறோம் என்று மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு யோகக்கலை பேருதவியாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்களே, நான் குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து டா. அநில் சோனாரா பேசுகிறேன். ஐயா, பல்வேறு இடங்களில் நாம் பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக, நினைவுப் பொருளாக நல்ல புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று அண்மையில் நீங்கள் கேரளத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன். இந்த விஷயத்தை நீங்கள் குஜராத்தில் முதல்வராக இருந்த பொழுதே தொடக்கியிருந்தீர்கள், ஆனால் அண்மைக்காலங்களில் இதுபோன்று நடப்பதில்லை. இதை மாற்ற ஏதாவது செய்யலாமே? இந்தக் கருத்தை நாடுமுழுமைக்கும் அமல் செய்யும் வகையில் நம்மால் ஏதாவது செய்ய முடியாதா ஐயா.

          கடந்த நாட்களில் எனக்கு மிகப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு கிட்டியது. கேரளத்தில் பி.என். பணிக்கர் அறக்கட்டளை வாயிலாக சில ஆண்டுகளாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது; அதாவது, மக்களிடம் படிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும், படிக்கும் பழக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக படிக்கும் நாள், படிக்கும் மாதம் என்ற வகையிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இங்கே பூங்கொத்துக்கள் அளிக்கப்படுவதில்லை, புத்தகங்களே அளிக்கப்படுகின்றன என்றும் என்னிடத்தில் கூறப்பட்டது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என் நினைவிலிருந்து தப்பிய ஒரு விஷயம் மீண்டும் எனக்கு நினைவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நான் குஜராத்தில் இருந்த வேளையில், நாம் இனி பூங்கொத்துக்களை அளிக்கக் கூடாது, புத்தகங்களே அளிக்க வேண்டும் அல்லது வரவேற்க வேண்டுமென்றால் கைக்குட்டை அளித்து வரவேற்பளிப்போம் என்ற வழிமுறையை உருவாக்கி இருந்தோம். அதுவும் கதராடைக் கைக்குட்டையையே அளிப்போம், ஏனென்றால் இதன்மூலம் கதராடைகளுக்கு ஊக்கம் அளிக்க முடியும். நான் குஜராத்தில் இருந்த வேளையில் இது பழக்கமாகவே மாறியிருந்தது, ஆனால் அங்கிருந்து நான் வந்த பிறகு, இந்தப் பழக்கம் விடுபட்டுப் போயிருக்கிறது. ஆனால் கேரளம் சென்ற போது, மீண்டும் எனக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. நான் இப்பொழுது அரசில் பணிபுரிவோரிடம், இந்தப் பழக்கத்தைத் தொடங்குங்கள் என்று கூறியிருக்கிறேன். நாமும் மெல்ல மெல்ல இதை ஒரு இயல்பாகவே ஆக்கப் பழகலாம். பூங்கொத்து நீண்டநேரம் நீடிப்பதில்லை. ஒருமுறை கையில் பெற்றுக் கொண்ட பின், அதை நாம் தள்ளி வைத்து விடுகிறோம்.

ஆனால் நாம் புத்தகங்களை அளிக்கும் போது, ஒரு வகையில் அது வீட்டின் ஒரு அங்கமாகவே ஆகி விடுகிறது, குடும்பத்தின் உறுப்பினராக மாறி விடுகிறது. கதர்க்கைக்குட்டைகளை அளித்தும் கூட நாம் வரவேற்பளிக்கலாம், இதனால் எத்தனை ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கிறது தெரியுமா? செலவும் குறைவு, சரியான முறையில் பயன்படவும் செய்கிறது. இந்த விஷயங்களுக்கு வரலாற்று ரீதியிலான மகத்துவம் அதிகம் இருக்கிறது. நான் கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்த போது, லண்டன் மாநகரில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே தாய்மை நிறைந்த சூழல் நிலவியது. மிகவும் அன்போடு எனக்கு உணவளித்தார், பிறகு அவர் மிகவும் மரியாதையோடு, ஒரு சிறிய கதர்க் கைக்குட்டையைக் காட்டினார். அவர் கண்களில் ஒரு ஒளி பளிச்சிட்டது, எனக்குத் திருமணமான போது, காந்தியடிகள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்தக் கைக்குட்டையை பரிசளித்தார் என்று உணர்ச்சி பொங்கும் குரலில் அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன, ஆனால் எலிசபெத் ராணி, காந்தியடிகள் பரிசளித்த கைக்குட்டையை பாதுகாப்பாக வைத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் ஆனந்தம் மேலிட, எனக்கு அதைக் காண்பித்தார். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அதை நான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்றே எனக்குப் பட்டது. காந்தியடிகளின் ஒரு மிகச்சிறிய அன்பளிப்பு அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகியிருக்கிறது, அவரது சரித்திரத்தின் ஒரு பகுதியாக மாறி விட்டிருந்தது. இந்தப் பழக்கங்கள் இரவோடு இரவாக மாறி விடுவதில்லை; இப்படிப் பேசுவதால், விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. அதே வேளையில், இது போன்ற உரையாடல்களில் ஈடுபட வேண்டும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நான் எங்காவது செல்லும் பொழுது, யாராவது பூங்கொத்து கொண்டு வந்தால், அதை வேண்டாம் என்று மறுக்க மாட்டேன், அப்படி என்னால் செய்ய முடியாது. விமர்சனங்கள் எழத்தான் செய்யும், நாம் மீண்டும் மீண்டும் கூறத் தான் வேண்டும், மெல்ல மெல்ல ஒரு மாற்றம் ஏற்படும்.

     எனதருமை நாட்டு மக்களே, நாட்டின் பிரதமர் என்ற முறையில் பல அலுவல்கள் இருக்கின்றன. கோப்புகளில் மூழ்கி இருக்க வேண்டி இருந்தாலும், நான் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்; அதாவது எனக்கு வரும் கடிதங்களில் சிலவற்றையாவது படித்துப் பார்த்து, சாதாரண மக்களோடு என்னை இணைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டிருக்கிறேன். பலவகையான கடிதங்கள் வருகின்றன, பலதரப்பட்ட மக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் முன்பாக நான் படித்த ஒரு கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நான் உணர்கிறேன். தென்னகத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த திருமதி. அருள்மொழி சரவணன் என்ற இல்லத்தரசி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். என் குழந்தைகளின் கல்விச் செலவினங்கள் போன்றவற்றை மனதில் இருத்தி, நான் வருமானம் அளிக்கும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம், இதனால் குடும்பத்தின் பொருளாதார நிலையில் சற்று மேம்பாடு ஏற்படும் என்று கருதினேன். ஆகையால் நான் முத்ரா திட்டத்தின்படி, வங்கியிலிருந்து பணம் பெற்று, சந்தையிலிருந்து சில பொருட்களை வாங்கி அளிக்கும் பணியை தொடக்கி இருக்கிறேன். இதற்கிடையில், பாரத அரசு government E-Marketplace, அரசு மின்னணுச்சந்தை என்ற அமைப்பின் மீது என் கவனம் சென்றது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் சிலரிடம் விசாரித்துப் பார்த்த பிறகு, நானும் அதில் என்னைப் பதிவு செய்து கொண்டேன். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் இணையத்தில் E-GEM, E – G E Mற்கு சென்று பாருங்கள் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இது மிக புதிய வகையிலானதொரு அமைப்பு. யார் அரசுக்கு ஏதாவது அளிக்க விரும்புகிறார்களோ – மின்சார பல்புகள், குப்பைத் தொட்டிகள், துடைப்பங்கள், நாற்காலிகள், மேஜைகள், போன்ற எதை விற்க நினைத்தாலும், அவர்கள் இந்த தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவரிடம் என்ன தரத்திலான பொருட்கள் இருக்கின்றன, என்ன விலைக்கு அவரால் விற்க முடியும் என்பதை அதில் குறித்து வைக்கலாம். மேலும் அரசுத் துறைகள் இந்த தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டும், யார் குறைந்த விலையில், தரமான பொருட்களை அளிக்கிறார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு பொருட்களை வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்படும். எல்லா வகையிலும் ஒளிவுமறைவற்ற தன்மை பளிச்சிடும். Interface, இடைமுகம் கிடையாது, தொழில்நுட்பம் மூலமாக அனைத்தும் நிகழ்கிறது. அந்த வகையில் E-GEMஇல் யார் பதிவு செய்து கொள்கிறார்கள் என்பதை அரசின் அனைத்துத் துறைகளும் கவனித்து வருகிறார்கள். இடைத்தரகர்கள் இல்லாத காரணத்தால் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. இப்பொழுது தன்னால் என்னென்ன பொருட்களை அளிக்க முடியும் என்பதை அருள்மொழி அவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அவர் எழுதிய கடிதம் மிகவும் சுவாரஸியமானது. எனக்கு முத்ரா திட்டத்தின் மூலமாகக் கடன் கிடைத்தது, நான் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன் என்பது ஒன்று, E-GEM வாயிலாக என்னால் என்ன அளிக்க முடியும் என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, எனக்கு பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.

உள்ளபடியே இது எனக்கு ஒரு புதிய செய்தி தான்; பிரதமர் அலுவலகத்தில் என்ன வாங்கியிருப்பார்கள் என்று நான் யோசித்த பொழுது, அவர் பிரதமர் அலுவலகத்தில் 2 தெர்மாஸ் பிளாஸ்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இதற்கு எனக்கு 1600 ரூபாய் பணம் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார். இது தான் empowerment, அதிகாரமளிப்பு. இது தான் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் வாய்ப்பு. ஒருவேளை அருள்மொழி அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை என்று சொன்னால், இது என் கவனத்தில் வந்திருக்காமல் போயிருக்கலாம். E-GEM வாயிலாக தொலைவான தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு இல்லத்தரசி ஒரு சிறிய வியாபாரம் செய்து வருகிறார், அவர் விற்கும் பொருட்கள் பிரதமர் அலுவலகம் வரை வாங்கிக் கொள்ளப்படுகிறது. இது தான் தேசத்தின் பலம். இதில் ஒளிவுமறைவற்ற தன்மையும் இருக்கிறது, இதில் அதிகாரமளிப்பும் இருக்கிறது, இதில் தொழில்முனைவும் இருக்கிறது. Government E-Marketplace – GEM. யாரெல்லாம் அரசுக்குத் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் எல்லாம் அதிக அளவில் இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்பதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதன் நோக்கம் என்ன? குறைந்தபட்ச விலை, அதிகபட்ச எளிமை, திறன் மற்றும் ஒளிவுமறைவற்ற தன்மை.

 

                எனதருமை நாட்டுமக்களே, நாம் யோகக்கலை பற்றி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், விண்வெளி விஞ்ஞானத்தில் நாம் ஏற்படுத்தி வரும் சாதனைகளும் நம் நெஞ்சை விம்ம வைக்கின்றன. நமது காலடிகள் யோகத்தால் இணைக்கப்பட்ட பூமியில் பதிந்திருக்கும் அதே வேளையில், நாம் தொலைவில் இருக்கும் விண்ணையும் தொட்டுப் பார்க்கும் கனவை மெய்ப்பித்து வருகிறோம் என்பது தான் பாரதத்தின் மிகப்பெரிய சிறப்பு. கடந்த நாட்களில் விளையாட்டிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி, பாரதம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இன்று பாரதம் பூமியில் மட்டுமல்ல, விண்ணிலும் கூடத் தன் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது. 2 நாட்கள் முன்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ நிறுவனம் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளுடன், 30 நானோ செயற்கைக்கோள்களையும் விண்ணில் வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இந்த செயற்கைக்கோள்களில் பாரதம் தவிர, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா போன்று, சுமார் 14 நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. பாரதத்தின் இந்த நானோ செயற்கைக்கோள் இயக்கம் விவசாயத் துறை,  இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான தகவல்கள் பெறுதல் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவு உதவிகரமாக இருக்கும். சில நாட்கள் முன்பாகத் தான், இஸ்ரோ நிறுவனம் ஜி.சாட்-19 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நினைவிருக்கலாம். இதுவரை பாரதத்தின் அனைத்து செயற்கைக்கோள் ஏவுதல்களிலும், மிகப்பெரிய எடை கொண்ட செயற்கைக்கோள் இது தான். நம் நாட்டின் செய்தித்தாள்கள் அனைத்தும் இதை யானையின் எடையோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, விண்வெளித் துறையில் நமது விஞ்ஞானிகள் எத்தனை பெரிய சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஜூன் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பி 1000 நாட்கள் முடிந்திருக்கின்றன. செவ்வாய் கிரஹத்துக்கு நாம் செயற்கைக்கோளை அனுப்ப வெற்றிகரமாக சுற்றுப்பாதை ஏற்படுத்தியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் ஆயுட்காலம் வெறும் 6 மாதங்களுக்குத் தான் என்றாலும் கூட, நமது விஞ்ஞானிகளின் முயற்சிகளின் வல்லமை காரணமாக இது 6 மாதங்களையும் கடந்து செயல்பட்டு வருகிறது. இப்பொழுது 1000 நாட்கள் கடந்தும் இது செயலாற்றி வருகிறது, புகைப்படங்கள் அனுப்பி வருகிறது, தகவல்கள் அளிக்கிறது, அறிவியல் தரவுகளை அள்ளித் தருகிறது. காலத்தின் எல்லைகளைத் தாண்டி, தனது ஆயுட்காலத்தையெல்லாம் கடந்து, இது சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறது. 1000 நாட்கள் கடப்பது என்பது நமது அறிவியல் பயணத்தில், நமது விண்வெளிப் பயணத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த மைல்கல்.

இப்போதெல்லாம் விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்கள் அதிக முன்னேற்றம் அடைந்து வருவதை நம்மால் காண முடிகிறது. கல்வியைத் தவிர, அவர்கள் விளையாட்டுத் துறையிலும் தங்கள் எதிர்காலம் இருப்பதை அவர்கள் உணர்ந்து வருகிறார்கள். நமது விளையாட்டு வீரர்கள், அவர்கள் முயற்சிகள், அவர்களின் சாதனைகள் ஆகியவை காரணமாக, நாட்டுக்கு பெருமை ஏற்பட்டு வருகிறது. அண்மையில் தான் பாரதத்தின் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் இந்தோனேசியா ஓப்பன் பந்தயத்தில் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இந்த சாதனை படைத்ததற்கு நான் அவருக்கும் அவரது பயிற்றுனருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடகள வீராங்கனை பி.டி. உஷா அவர்களின் உஷா தடகள பள்ளியில், செயற்கைத் ஓடுதளத்தைத் திறந்து வைக்கும் விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு சிலநாள் முன்பு எனக்குக் கிட்டியது.

விளையாட்டுக்கள், விளையாட்டு உணர்வை ஏற்படுத்துகின்றன; ஆகையால் தான் நாம் விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டில், விளையாட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நாட்டில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை. நமது குடும்பத்திலும் பிள்ளைகள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு கொண்டிருந்தால், அவர்களுக்கு நாம் வாய்ப்பமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களை மைதானத்திலிருந்து விலக்கி, அறைக்குள் பூட்டி வைத்து, படிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. அவன் படிக்கவும் செய்யட்டும், அதிலே அவன் முன்னேற்றமும் அடையட்டும்; ஆனால் அவனுக்கு விளையாட்டில் அதிகத் திறமையோ, ஆர்வமோ இருந்தால், பள்ளிக்கூடம், கல்லூரி, குடும்பம், அக்கம்பக்கத்திலிருப்போர் என அனைவரும் அவனுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் கனவை அனைவரும் காண வேண்டும்.

         மீண்டும் ஒருமுறை எனதருமை நாட்டு மக்களே, மழைக்காலம், தொடர் கொண்டாட்டங்களின் காலமாக, ஒரு வகையில் புதியவகை அனுபவங்களை உருவாக்கித் தரும் காலமாக அமைந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்த மனதின் குரலில் உங்களோடு இணைகிறேன். வணக்கம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், 'மன் கீ பாத்' என்ற பெயரில், ரேடியோ மூலம், நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.(25.06.2017) ஒலிபரப்பான, மன் கீ பாத் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply