உணவு உற்பத்தியில் தன்னிறைவுபெற வேளாண் உற்பத்திக்கு நாம் முன்னுரிமை அளிக்கவேண்டும் என குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கய்ய நாயடு கூறினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75}ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் விளம்பரம் மற்றும் காட்சி இயக்குநரகம், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் இணைந்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த "புதியஇந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்போம்' என்ற தலைப்பிலான கண்காட்சியை குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கய்ய நாயடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்பேசியது:


வேளாண்மைக்கு முன்னுரிமை: வேளாண்மையே இந்தியாவின் கலாசாரம். அதனை வளப்படுத் துவதிலும், மேம்படுத்துவதிலும் நாம் உறுதிகொள்ள வேண்டும். இந்தியாவில் வேளாண் மற்றும் தொழில் துறை இரண்டும் இருகண்கள் போன்றது. இந்த இரண்டையும் நாம் சமமாகப் பாவிக்க வேண்டும். இந்த இரண்டின் வளர்ச்சியைப் பற்றி நாம் ஒரேநேரத்தில் சிந்திக்க வேண்டும். அதேவேளையில் வேளாண்மைக்கு அதிகமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். காரணம் உணவுப்பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றால் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும். உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது நீடித்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையாது. விவசாய பொருட்களுக்கான விலையை விவசாயியே நிர்ணயம்செய்ய வேண்டும் என்று நாம் அனைவரும் கூறிவருகிறோம். அதற்கு நாம் விவசாயத்தை மேம்படுத்தவேண்டும். பிறகு விவசாயத்துக்கென நீண்டகால அடிப்படையில் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.


கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்: நாட்டில் உள்ள விவசாயிகளில் 40 சதவீதத்தினர் மட்டுமே வங்கிகள் மூலம் கடன்பெறுகின்றனர். எஞ்சியவர்களுக்கு போதிய கடன் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம்தான் கடன்பெறுகின்றனர். பிறகு எப்படி விவசாயி, தான் விளைவிக்கும் உணவுப்பொருளுக்கு அவன் விலை நிர்ணயம் செய்யமுடியும்.

மாநிலங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாட்டின் ஒருபகுதியில் உற்பத்தியாகும் பொருட்களை வேறு ஒருபகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும். ஓர் ஆசிரியரின் மகன் ஆசிரியராகிறான். காவல் அதிகாரியின் மகன் காவல் அதிகாரியாகிறான். ஆனால் எந்தவொரு விவசாயியும் தனது மகன் விவசாயி ஆகவேண்டும் என்று விரும்புவதில்லை. காரணம் விவசாயிக்கும் விவசாயத்துக்கும் நம் நாட்டில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள முக்கியத்துவமற்ற அவல நிலைதான். இதனைக் கருத்தில்கொண்டு விவசாயத்தை மேம்படுத்த நாம் முன்னுரிமை அளிக்கவேண்டும். குறிப்பாக மத்திய}மாநில அரசுகள் இதனை துரிதப்படுத்த வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளாட்சி, மத்திய}மாநில அளவில் இணைந்து செயல்பட வேண்டும்.


இந்தியாவின் மிகப்பெரிய சவால்: நாட்டில் ஊழல், தீவிரவாதம், சாதி, மதம், கல்லாமை, இல்லாமை இல்லாத புதிய இந்தியாவை நாம் உருவாக்கவேண்டும். நாட்டில் அனைத்து மக்களையும், சாதி}மத வேறுபாடில்லாமல் ஒன்றிணைப்பதே இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்குமுதலில் கிராமப்புறங்களை மேம்படுத்த வேண்டும். அங்கு நிலவும் கல்வியின்மையையும், வறுமையையும் முதலில் ஒழிக்கவேண்டும். அமைதியை உள்ளடக்கிய வளர்ச்சியை நாடுமுழுவதும் ஏற்படுத்துவதே புதிய இந்தியாவின் நோக்கம்.


பாலின வேறுபாட்டைக்களைய வேண்டும்: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் சிலபகுதிகளில் தீண்டாமை இருப்பது கண்டிக்கத்தக்கது. பாலின வேறுபாட்டை களையவேண்டிய நேரம் வந்து விட்டது. மதம் என்பது தனிப்பட்ட உரிமை. கலாசாரம் என்பது வாழும் வழிமுறை. இதனை நாம் புரிந்துகொண்டு வேற்றுமைகளைக் களையவேண்டும். இந்து}முஸ்லிம் என மதரீதியில் நினைப்பதை நாம் முதலில் கைவிட வேண்டும். இந்தியர் என்று நாம் நினைக்கவேண்டும். "முத்தலாக்' முறை நீக்கப்பட்டது இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்கத்தீர்ப்பு. பண்டைய காலம் தொட்டே இந்தியாவில் பெண்களுக்கு சம உரிமை வழங்கிவந்துள்ளோம். தற்போது நிலவும் பாலின பாகுபாட்டைக் களையவேண்டும். பெண்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகத்தில் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.


 

Leave a Reply