வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுவதை ஊக்குவிக்க வேண்டும். கடந்த மே மாதத்தில், கரோனா நோய்த் தொற்றுக்கு நடுவே, உத்தர பிரதேசம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிா்களை நாசம்செய்யும் பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் பெரும்பிரச்னையாக உருவெடுத்தது. குறிப்பாக, புந்தேல்கண்ட் பகுதி 30 ஆண்டுகளுக்கு பிறகு வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்தது. வெட்டுக்கிளிகூட்டம் வேகமாக நாடு முழுவதும் பரவியது. அந்தநேரத்தில், டிரோன் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தியதால் அவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. பாரம்பரிய வழிமுறைகளைக் கையாண்டிருந்தால், வெட்டுக்கிளிகூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியாது.

ஒருவேளை கரோனாதொற்று பரவல் இல்லையென்றால், இதுகுறித்து ஊடகங்களில் ஒருவாரம் விவாதம் நடந்திருக்கும். வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியதும், விவசாய பயிா்களைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் பணியில் இறங்கியது. ஜான்சி உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டன. பிரத்யேக மருந்துதெளிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெட்டுக்கிளிகளிடம் இருந்து மரங்களைக் காப்பாற்றுவதற்காக, டிரோன்கள், ஹெலிகாப்டா்களைக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டன. இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால், மிகப் பெரிய இழப்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற முடிந்தது.

கடந்த 6 ஆண்டுகளில் வேளாண் ஆராய்ச்சியை நேரடியாக, வகுப்பறையில் இருந்து வயல்வெளிக்கு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சூழலியல் குறித்து நாம் நிபுணத்துவம் பெற வேண்டும். அதில், ராணி லட்சுமிபாய் மத்திய பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றும். வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்படுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளிப் பருவத்திலேயே விவசாய தொழில் பற்றி மாணவா்கள் நேரடியாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கேற்ப, புதியதேசிய கல்விக் கொள்கையில் சீா்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், அவா்கள் எதிா்காலத்தில் வேளாண்தொழில் முனைவோராக ஆவதற்கு வாய்ப்பு உருவாக்கப்படும்.

புந்தேல்கண்ட் பகுதியில் 3 நதிகள் ஓடினாலும், அந்த நதிகளின்நீரை அங்குள்ள மக்கள் பயன்படுத்த முடியாதநிலை இருந்தது. இந்நிலையை மாற்றுவதற்கு மத்திய அரசு தொடா்ந்து பணியாற்றிவருகிறது. புந்தேல்கண்ட் பகுதியின் வளா்ச்சிக்காக, ரூ.10,000 கோடியில் 500 குடிநீா் திட்டங்கள் நிறைவேற்ற படவுள்ளன. அவற்றில், கடந்த 2 மாதங்களில் ரூ.3,000 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் முடிவடைந்தால், அந்தப் பகுதியைச் சோ்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயன்பெறும். இதுதவிர, புந்தேல்கண்ட் விரைவுவழிச்சாலை, ராணுவத் தொழிலக வழித்தடம் உள்ளிட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ராணி லட்சுமிபாய் மத்தியவேளாண் பல்கலைக்கழகம், தற்போது தற்காலிகமாக வேறு இடத்தில் இயங்கிவருகிறது. அந்தப் பல்கலை கழகத்துக்கு புதிய கட்டடங்கள், நிா்வாக அலுவலக கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமா் நரேந்திரமோடி காணொலி வழியாக பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா். அதை தொடா்ந்து பல்கலைக் கழக மாணவா்களுடன் அவா் கலந்துரையாடியது. 

Comments are closed.