''ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர்'' என்று அபாண்டமான ஒருகுற்றச்சாட்டை பொது மேடையில் வைத்த வைரமுத்துவின் கருத்துக்கு, ஆதாரப்பூர்வமான மறுப்பு கிடைத்துள்ளது. அவர் கூறியது மாபெரும்பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.


ஜன.,7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசும்போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராககொண்டு வெளியிட்ட, indian movement: some aspects of dissent, protest and reform என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in srirangam temple என்று குறிப்பிட்டப் பட்டுள்ளது என்று கூறினார்.
 

ஆனால், அவர் குறிப்பிட்ட எஸ்.சி.மாலிக் புத்தகத்தை தேடும்போது இண்டியானா பல்லைக் கழகம் அப்படி ஒரு ஆய்வை நடத்தவேயில்லை என்பது தெரிய வந்தது. 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.


அந்த கட்டுரைகளை தொகுத்தவர்தான் எஸ்.சி.மாலிக்; எழுதியவர் அல்ல. அவரோ, இண்டியானா பல்கலையோ ஆண்டாள் பற்றிய ஆய்வை நடத்த வில்லை. அந்தபுத்தகத்தில் ஆண்டாள் பற்றி, bhakti movements in south india என்ற கட்டுரையில்தான் ஆண்டாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதியவர்கள் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில்தான், Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple என்ற வரி இடம்பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில்தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்தகட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழுகதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள்தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்ட தாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் தனியே ஸ்ரீவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பக்கத்தில் தேவதாசி என்ற வார்த்தையே இல்லை. பிறகு எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அளித்த பேட்டி:


கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒருதேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.


கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?
நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.


கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?


நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்துதான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.


கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒருபுரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?
நாராயணன்: இது ஒரு அனுமானம்தான். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
 

இது குறித்து ஒரு வைணவ அறிஞர் கூறும் போது, ‛‛எந்த ஆதாரமும் இல்லாத ஒருதகவலை, ஆதாரப்பூர்வ தகவலைப் போன்று வைரமுத்து பேசி உள்ளார். அதுவும், நடக்காத ஒருஆய்வை, நடத்தாத ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயருடன் அவர் எவ்வாறு குறிப்பிட்டார்.

அக்கட்டுரையை எழுதிய நாராயணன் என்பவரே, ஆண்டாள் பற்றிய செவிவழி செய்தியை மட்டுமே குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட, ஆதாரமற்ற ஒருதகவலை வைரமுத்து ஏன் பரப்பினார். இதன் மூலம் வேண்டுமென்றே ஆண்டாளை வைரமுத்து அசிங்கப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது. அவரது உள்நோக்கமும் புரிகிறது. கடவுளாகவணங்கும் ஒருவரைப் பற்றி, மாபெரும் பொய்யைபேசிய வைரமுத்து, இனிமேலாவது பொய் சொன்னேன் என ஒப்புக்கொள்வாரா. பகிரங்க மன்னிப்பு கேட்பாரா'' என்று கூறினார்.

Leave a Reply