ஸ்ரீ புரம் நாராயணி பீடத்தின் 26-ஆம் ஆண்டுவிழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.


வேலூர், ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தின் ஆண்டுவிழா ஆண்டுதோறும் மே 8-ஆம் தேதி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன் 26-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. விழாவை யொட்டி, உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும் நாராயணி பீடத்திலுள்ள நாராயணி அம்மனுக்கு பக்தர்களின் கைகளாலேயே மஞ்சள் நீர்கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதன்படி, நாராயணி யந்திரத்துக்கு மஞ்சள் நீர் கலச அபிஷேகம் செய்வதற்கான பக்தர்கள் ஊர்வலம் காலை 7 மணிக்கு நாராயணி வித்யாலாயா பள்ளியில் இருந்து புறப்பட்டது. இதில், மாலை அணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மஞ்சள்நீர் கலசங்களை சுமந்துசென்று நாராயணி அம்மனுக்கு தங்களது கைகளாலேயே அபிஷேகம் செய்தனர்.


விழாவையொட்டி, நாராயணி யாகம் நடைபெற்றது. பீடாதிபதி சக்தி அம்மா தலைமையில் நடைபெற்ற இந்த யாகபூஜையில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரும் செவ்வாய்க்கிழமை வேலூருக்கு வந்திருந்தனர்.

அவர்கள் தங்கக்கோயிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்ததுடன், நாராயணி யாகத்திலும் பங்கேற்றனர். இதையடுத்து நாராயணி செவிலியர் பயிற்சி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள நாராயணி அரங்கம், ஆய்வுக்கூடம் ஆகியவற்றை ஜெகத் பிரகாஷ் நட்டா, தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர்.

Leave a Reply