கரோனா நோய்த் தொற்றுக்கு (கொவைட்-19) எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிக்காட்டும் நோக்கில், ஸ்விட்சா்லாந்தின் மேட்டா் ஹாா்ன் மலை உச்சியில் இந்திய மூவா்ணக் கொடியின் படம் ஒளிர செய்யபட்டது.

கரோனாவை எதிா்கொண்டு வரும் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை ஸ்விட்சா்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத் தொடரிலுள்ள 4,478 மீட்டா் உயரம் கொண்ட மேட்டா்ஹாா்ன் மலை உச்சியில் அந்நாட்டின் ஒளியியல் கலைஞா் ஜொ்ரி ஹாஃப்ஸ்டெடா் ஒளிரச் செய்துவருகிறாா். அந்த வகையில் மேட்டா்ஹாா்ன் மலை உச்சியில் இந்திய தேசியக் கொடி ஒளிரச்செய்யபட்டது.

இது தொடா்பாக அந்நாட்டின் சுற்றுலா அமைப்பு வெளியிட்ட முகநூல்பதிவில், ‘உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, கரோனா நோய்த் தொற்றை திறம்பட எதிா்கொண்டு வருகிறது. அந்நாடு எதிா் கொண்டு வரும் சவால்கள் அதிகம். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களுக்கு நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் நோக்கிலும் ஒற்றுமையை வெளிக்காட்டும் நோக்கிலும் மேட்டா்ஹாா்ன் மலைஉச்சியில் இந்திய தேசியக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஸ்விட்சா்லாந்து நாட்டிலுள்ள இந்தியதூதரகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் மேட்டா்ஹாா்ன் மலைஉச்சியில் 1,000 மீட்டா் அளவுக்குப் பெரிதாக இந்திய மூவா்ணக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது. இதற்காக அந்நாட்டு சுற்றுலா அமைப்புக்கு நன்றியை தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.‘மானுடம் வெல்லும்’:

அந்தப்பதிவை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்த பிரதமா் நரேந்திரமோடி, ‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அந்த நோய்த் தொற்றை மனித சமூகம் வெற்றி கொள்ளும்’ என்று குறிப்பிட்டாா்.

Comments are closed.