மாநிலங்களவை இன்று கூடியதும், முக்கிய பிரமுகர்களுக்கு அகஸ்டா வெஸ்ட் லாண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்தமுறைகேடு குறித்து பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர். மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் இந்தவிவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தரப்பில் 4–ந் தேதி பாதுகாப்பு மந்திரி அறிக்கை தாக்கல்செய்வார் என்று கூறப்பட்டது.

ஆனால், இதை ஏற்காமல் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் இருக்கை அருகே சென்று அவர்கள் கோஷமிட்டனர். இதேபோல் குஜராத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் விவகாரத்தில் மத்திய கணக்குதணிக்கை குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினையை கிளப்பினர். இதனால் மாநிலங் களவையில் கடும் அமளி ஏற்பட்டு, அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து வலியுறுத்திய போதும் காங்கிரசின் கோரிக்கையை மாநிலங்களவை பாஜக. தலைவர் அருண் ஜெட்லி ஏற்க மறுத்தார்.

இதுபற்றி அவர் பேசுகையில், “குஜராத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் தொடர்பான மத்திய கணக்குதணிக்கை குழுவின் அறிக்கையினை, குஜராத் சட்ட சபையின் பொது கணக்கு குழு பரிசீலனை செய்துவருகிறது. இந்த சமயத்தில் மாநிலங்களவையில் பிரச்சனை எழுப்புவது தவறான முன்னுதாரணம் ஆகும். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இதனை திசை திருப்பும் வகையில் காங்கிரஸ் இந்த பிரச்சனையை எழுப்புகிறது” என்றார் ஜெட்லி.

இந்த குற்றச்சாட்டை மறுத்த எதிர்க் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், நான்கைந்து நாட்களுக்கு முன்னதாகவே நோட்டீஸ் கொடுத்திருப்தாக கூறினார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம் குறித்து விவாதிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது என்றும், பயந்து ஓடமாட்டோம் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா பேசினார்.இந்த விவாதங்களும், அமளிலும் நீடித்ததால் மாநிலங்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply