தமிழ்நாடு பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தற்போதைய நடைமுறை விதிகளின் படி குரூப் – 1 தேர்விற்கான வயது வரம்பு பொது பிரிவிற்கு 30 வயதாகவும், இதர ஏனைய பிரிவினருக்கு 35 வயதாகவும் உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வும் ஆண்டு தோறும் நடைபெறாமல் உள்ளது.

கடந்த 2001 முதல் 2013 வரையிலான காலங்களில் சுமார் 5 முறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எனவே நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழை இளைஞர்கள் வயது வரம்பின் காரணமாக அரசு உயர்பதவிக்கான தேர்வெழுத இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் குஜராத் மாநிலத்தில் இளைஞர் மற்றும் பெண்கள் நலன் கருதி குஜராத் முதல்வர் மாண்புமிகு. திரு. நரேந்திரமோடி அவர்கள் குரூப் – 1 தேர்வெழுதுவதற்கான வயது வரம்பை பொது பிரிவினருக்கு 40 ஆகவும், பெண்களுக்கு 45 வயதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 45 வயதாகவும், இப்பிரிவுகளது பெண்களுக்கு 50 வயதாகவும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்கள்.

அதே போல தமிழகத்திலும் வயது வரம்பை உயர்த்தியும், ஆண்டு தோறும் தேர்வு நடத்த தமிழக அரசு உத்திரவிடுவதன் மூலம் கிராமப்புற மற்றும் நடுத்தர, ஏழை மாணவர்கள் பயனடைய வழிவகுக்க வேண்டுமென தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சி; கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply