காஷ்மீரை  காப்போம்  பாகம் 1புராண காலம் தொட்டு காஷ்மீர் பாரதத்துடன் இணைந்திருக்கும் பகுதியாகும் . காஷ்யப முனிவரால் உருவாக்கப்பட்ட சமவெளிப்பகுதி தான் காஷ்மீர் . பூவுலகின் சொர்க்கம் என காஷ்மீர் அழைக்கபடுகிறது . ஹிந்துக்கள் புனிதமாக கருதும் கைலாயம், மான சரோவர் ஏறி உற்பத்தியாகும் இடமும் அங்கு தான் உள்ளது . பலாயிரம்கனக்கான

 

ஆண்டுகளாக ஹிந்துக்கள் அந்த அழகிய பனிமலை மீது குடிகொண்டிருக்கும் சிவபெருமானை தரிசனம்செய்வதற்காக காஷ்மீருக்கு கைலாய யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். மாதா வைஷ்ணவிதேவி இருந்து வருகிற இடம். பகவான் அமர் நாத் பக்தர்களுக்கு அருள்பாவித்து வருகிற இடம் காஷ்மீர். சூரியபகவானுக்கு மார்த்தாண்டன் எனும் பெயர் உண்டு. காஷ்மீரில் மார்த்தாண்டகோயில் இருந்து வந்துள்ளது. தற்போது அது பாழடைந்து சிதைந்து இருக்கிறது. கல்ஹனர் காஷ்மீர் சரித்திரத்தை விவரிக்கும் ராஜதரங்கிணி என்ற நூலை இந்த மார்த்தாண்ட ஆலயத்திலிருந்து கொண்டு தான் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இமயமலையே ஹிந்துக்களுக்குப் புனிதமாகும். ஹிந்துக்கள் இப்பூமியை வெறும் மண்ணாக மலையாக நீராக மட்டும் பார்ப்பதில்லை. இங்கு எல்லாவற்றிலும் இறைவனைக் காண்பது என்பது பாரதப் பண்பாடாகும். மலை புனிதம், நதி புனிதம், கடல் புனிதம், பூமியை பூ, மாதா, என்று அழைக்கின்ற உயர்ந்த பண்பாடு பாரதப் பண்பாடாகும். அம்மாதிரிதான் முழு இமயமும் ஹிந்துக்களுக்கு புனிதமாகும். காலம் காலமாக அங்கு ஹிந்து மன்னர்களின் ஆட்சிதான் நடந்து வந்திருக்கிறது. பௌத்த விஹாரங்கள் அதிகமாக இங்கு இருந்து வருகின்றது. பௌத்தர்களுக்கும் இமயம் புனிதமாகும்.

1947 அக்டோபர் 26ஆம் தேதியன்று காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் அவர்கள் ஜம்மு காஷ்மீரை பாரத்துடன் முழுமையாக இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழத்திட்டு இந்திய கவர்னர் ஜெனரலாக பதவி வகித்து வந்த மவுண்ட்பாட்டனுக்கு அனுப்பி வைத்தார்.

அவர் அந்த இணைப்பு பிரகடனத்தை ஏற்றுக் கொண்டு 1947 அக்டோபர் 27 ஆம் தேதியன்று அங்கீகாரம் செய்து ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியென அறிவித்தார். அன்று இணைந்த முழுமையான ஜம்மு காஷ்மீர் இன்று நம்மிடம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

ஜம்மு காஷ்மீர் விவரங்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று வித்தியாசமான பகுதிகளை உள்ளடக்கியது.1) ஜம்மு 2) காஷ்மீர் 3) லடாக்

ஜம்மு

 ஜம்முவின் மொத்த நிலப்பரப்பு 36315 ச.கி.மீ. அதில் தற்போது நம்வசம் இருப்பது 26,000 ச.கீ.மீ. மட்டுமே. பீர்பாஞ்சல் என்கிற மிக உயரமான மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் தாவி,ஜீலம்,செனாப் போன்ற வற்றாத ஜீவ நதிகள் உற்பத்தியாகி இப்பகுதியை வளப்படுத்துகிறது. இங்கு மக்கள் தொகையில் 67 சதவிகிதம் ஹிந்துக்கள் ஆவர். டோக்ரி மற்றும் பஹாடி மொழிகள் மக்களிடையே வழக்கத்தில் இருந்து வருகிறது.

காஷ்மீர்

இது ஒரு சமவெளிப் பகுதி. இதன் மொத்தப் பரப்பளவு 22,000 ச.கீ.மீ. ஆகும். ஆனால் இதில் தற்போது 16,000 ச.கீ.மீ. மட்டுமே நம்வசம் இருந்து வருகின்றது. இப்பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். ஜீலம், கிஷன்கங்கா போன்ற நதிகள் பாய்ந்து சமவெளியை வளப்படுத்தி வருகின்றன. இங்கு 2 சமவெளி இருக்கின்றது. ஒன்று ஜீலம் சமவெளி மற்றொன்று லோலாப் சமவெளி ஆகும். காஷ்மிரி மொழி வழக்கத்தில் இருந்து வருகின்றது. இருந்த போதிலும் மூன்றி ஒரு பகுதியினர் பஞ்சாப் பஹாடி பேசுகின்றனர். மாநிலத்தில் இருக்கின்ற பகுதிகளில் மிகச் சிறிய பகுதி இதுவேயாகும்.

லடாக்:

இமயத்தின் மிக உயரத்தில் இருக்கின்ற பகுதி லடாக். பரப்பளவிலும் மிகப் பெரியது. ஆனால் மக்கள் தொகையோ மிகமிகக் குறைவு. இயற்கை இங்கு கொட்டிக் கிடக்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 1,64,748 ச.கீ.மீ. ஆனால் அதில் தற்போது வெறும் 59,000 ச.கீ.மீ.  மட்டுமே நம்வசம் இருக்கிறது. புத்த மதத்தினரே இங்கு அதிகமாக வசித்து வருகின்றனர். ஏராளமான புத்த மடாலயங்கள் உள்ளன. மிக உயரமான பகுதியானாலும் கூட தட்பவெட்ப நிலைமை மிகவும் வறண்டு காணப்படும். மழை என்பது இங்கு அரிதிலும் அரிது. ஒரு வருடத்திற்கே சாராசரி வெறும் 3.2 அங்குலம் மட்டுமே மழை பொழிகிறது. வருடத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே ஆறுகளில் தண்ணீர் ஓடுவதைப் பார்க்க முடியும். மீதி நாட்கள் எல்லாம் பனி உறைந்த நிலையில்தான் இருக்கும்.

இதன் வடக்கே உயரமான காரகோரம் மலைத் தொடர் செல்கின்றது.அங்குதான் உலகப் பிரசித்தி பெற்ற காரகோரம் நெடுஞ்சாலை இருக்கிறது. 1999ஆம் வருடம் பாகிஸ்தானுடன் போர் நடைபெற்ற கார்கில் மலைத்தொடர் இங்குதான் உள்ளது.

1979 ஜூலை 1 அன்று லடாக்கில் இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று லே மற்றொன்று கார்கில். தன்னாட்சி அதிகாரம் கொண்ட மலை மேம்பாட்டுக் குழுவின் நிர்வாகம் அங்கு செயல்பட்டு வருகிறது. லடாக்கி மற்றும் பாலி மொழிகள் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இங்குள்ள லே, ஜன்ஸ்கார், சாங்தங், நூபுரா பள்ளத்தாக்குகளில் புத்த மதத்தினரும், அருவெளி பள்ளத்தாக்கில் ஷியா முஸ்லிம்களும் வசித்து வருகின்றனர். கார்கில் ஷியா முஸ்லிம்கள் தீவிர தேசப்பற்று மிக்கவர்கள். கார்கில் போரின்போது நமது ராணுவத்திற்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தவர்கள்.

1950 முதல் அப்பகுதியை கைப்பற்றிட சீனா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. லடாக்கை மேற்கு திபெத் என்று அது அழைக்கிறது. அங்கு ஓடுகின்ற சிந்துநதிக் கரையையே எல்லைக் கோடாக மாற்றிட வேண்டும் என்றும் விரும்புகிறது.
கில்ஜித் & பால்டிஸ்தான்

இவ்விரு பகுதிகளும் ஜம்மு காஷ்மீரின் பகுதியாகும். இதில் கில்ஜித் 42,000 ச.கீ.மி. பரப்பளவும் பால்டிஸ்தான் 20,000 ச.கீ.மி. பரப்பளவு கொண்டது. கில்ஜித் ராணுவ நோக்கில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

அப்பகுதியில் 6 நாடுகளின் எல்லைக் கோடுகள் தொட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சீன, திபெத், மற்றும் பாகிஸ்தான் எல்லைக் கோடுகள் சந்திக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதி இன்று நம்வசம் இல்லை. பாகிஸ்தான் பிடியில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் அரசு தனது நேரடிக் கண்காணிப்பின்கீழ் இப்பகுதிகளை நிவகித்து வருகிறது.

கில்ஜித் எவராலும் எளிதில் எட்ட முடியாத இடத்தில் அரணாக இருந்து நமது நாட்டினைக் காத்து வந்துள்ளது. அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றதோ அந்நாட்டின் கை இராணுவ ரீதியில் ஆசியப் பகுதியில் ஓங்கி இருக்கும். எனவே அதைக் கைப்பற்றிட அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் துவக்க முதலே முயற்சி செய்து வந்தன.

1935 இல் சோவியத் ரஷ்யா கிழக்கு துருக்மேனிஸ்தானைத் தாக்கியது. அச்சமயத்தில் ஆட்சிக் கட்டிலில் இருந்து வந்த பிரிட்ஷார் கில்ஜித்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து காஷ்மீர் மகாராஜாவுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு 60 வருடத்திற்கு கில்ஜித்தை குத்தகைக்கு எடுத்து தனது நேரடி நிர்வாகத்தில் வைத்துக் கொண்டனர்.

சீனாவின் செல்வாக்கு இப்பகுதியில் அதிகரித்து விடாமல் இருப்பதற்காக சோவியத் ரஷ்யா 60 களில் பாகிஸ்தானை ஆதரித்து உதவி செய்து வந்துள்ளது. ஆனால் தற்போது அப்பகுதியில் சீன அரசு மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் சுமார் 65,000 கோடி முதலீடு செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து வருகின்றனர். 11,000 சீனத் துருப்புகள் அங்கு இருந்து வருகின்றன.

1947 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய போது கில்ஜித் பகுதியை ஆங்கிலேயர்கள் காஷ்மீர் மகாராஜா வசம் திருப்பிக் கொடுத்து விட்டனர்.அதற்கு முன்பாக கில்ஜித்தின் பாதுகாப்பிற்காக ஒரு சிறு படையை உருவாக்கிக் கொடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் மன்னருக்கு 21 குண்டுகள் முழங்கி வரவேற்பு கொடுக்கப்பட்டு வந்தது.

இந்திய யூனியனுடன் இணைந்த சமஸ்தானங்களில் ஜம்மு காஷ்மீர் தான் மிகப் பெரிய சமஸ்தானமாகும். இந்தியாவுடன் அது இணைந்த போது மொத்தம் 2,22,236 ச.கீ.மி. இருந்தது. பாம்பே மாகாணத்தை விடப் பரப்பளவில் பெரியது. ஹிந்து மன்னர்களான டோக்ரா வம்சத்தினரின் கீழ் இருந்து வந்தது. காஷ்மீரில் அப்போது 76 சதவிகித மக்கள் முஸ்லிம்கள். நல்ல நிர்வாகம் மற்றும் தூமையான நல்லாட்சி வழங்கியதால் டோக்ரா மன்னர்களுக்கு மக்களிடையே பெரும் மரியாதையும் வரவேற்பும் இருந்து வந்தது.

 1947 ஜூன் 17 அன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து ராணி 1947 ஜூலை 18 அன்று அச்சட்டத்தை அங்கீகாரம் செய்து பிரிட்டிஷ் இந்தியாவை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரித்து சுதந்திரம் வழங்கிட போதவதாக அறிவித்தார்.

கிழக்கு வங்காளம் மேற்கு பஞ்சாப் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் மற்றும் சிந்து மாகாணங்களை பாகிஸ்தான் என்றும் மீதமுள்ளவை இந்தியா எனவும் அறிவிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து வந்த நாடுகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ அல்லது சுதந்திர தனி நாடாகவோ இருந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்நாடுகளைப் பாதுகாப்பது தன்னுடைய பொறுப்பு இல்லை என்றும் தனது பொறுப்பு முடிவிற்கு வந்து விட்டதாகவும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துவிட்டது. இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்கிற முடிவினை எடுப்பதற்கு அந்தந்த மன்னர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

500கும் மேற்பட்ட சிறிய நடுத்தர பெரிய சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்து புதிய பாரதத்தைக் கட்டி எழுப்பியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆவார்.

பட் டேலுக்கு இணையான ஒரு சாதனையை வேறு எவரும் இந்நாட்டில் நிகழ்த்தியதில்லை எனலாம். இன்றைய பாரதம் ஒரே நாடாக மாறிட அவர் ஒருவரே காரணமாவார் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு சமஸ்தானமும் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்திய யூனியனுடன் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவுடன் இணைந்திட இணைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டு கொடுத்திட வேண்டும். அதை கவர்னர் ஜெனரல் அங்கீகாரம் செய்து ஏற்றுக் கொண்டு பிரகடனம் செய்த பிறகே அந்த இணைப்பு முழுமை பெற்றதாகும். எந்த ஒரு நிபந்தனையுடன் நாட்டினை இணைப்பதற்கு சட்டத்தில் இடமே கொடுக்கப்படவில்லை. அதன் படியே அனைத்து சமஸ்தானங்களும் இணைந்தன.

மகாராஜா ஹரிசிங் அவர்களும் 1947 அக்டோபர் 26 ஆம் தேதியன்று எவ்வித நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்புவதாகக் சாசனத்தில் கையெழுத்திட்டு அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்து வந்த மவுண்ட் பாட்டன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அக்டோபர் 27 ஆம் தேதியன்று அதாவது அடுத்த நாளே மன்னரது கோரிக்கையை ஏற்று ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்ததாக பிரகடனம் செய்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக ஜம்மு காஷ்மீர் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மொத்த பரப்பளவு 2,22,236 சதுர கிலோ மீட்டர். 1947 இல் 83,294 ச.கி.மீ. இடத்தை ஆக்கிரமிப்பு செய்த பாகிஸ்தான் 1960 ஆம் வருடம் 5,180 ச.கி.மீ. பரப்பளவு இடத்தை சீனாவிற்குக் கொடுத்து விட்டது. தற்போது பாகிஸ்தான் வசம் 78,114 சதுர கிலோ மீட்டர் இருந்து வருகிறது.

1959 ஆம் வருடம் சீனா லடாக் பகுதியில் 42,735 ச.கி.மீ. பகுதியை ஆக்கிரமித்து செய்தது. மேலும் பாக் கொடுத்துள்ள 5,180 ச.கி.மீ. பகுதியை சேர்த்தால் சீனா வசம் மொத்தம் 47,735 ச.கி.மீ. பரப்பளவு இருந்து வருகிறது.

பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து ஜம்மு காஷ்மீரில் 1,20,859 ச.கி,மீ. பரப்பளவை சட்ட வி ரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. மீதமுள்ள 1,02,307 ச.கி.மீ. பரப்பளவு நிலப்பகுதி மட்டும்தான் நம்வசம் தற்போது இருந்து வருகின்றது.

முழுமையான கஷ்மீரைத்தான் மகாராஜா ஹரிசிங் நமது நாட்டுடன் இணைத்தார். அதில் பாதி கூட இன்று நம்மிடம் இல்லை. எஞ்சியுள்ள காஷ்மீரையும் தட்டிப் பறித்திட சதிகள் பல நடந்து வருகிறது. இழந்த காஷ்மீரை மீட்டிட வேண்டும். இருக்கின்ற காஷ்மீரைக் காத்திட வேண்டும்.

தொடரும்…..

Leave a Reply